அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நாளில், வடகொரியா ஏவுகணை வீசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தென்கொரியா எச்சரித்துள்ளது.

ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் நாளை நடக்கிறது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் உலகம் முழுவதும் பரபரப்பாக உற்று நோக்கப்படுகிறது.

தேர்தலுக்கு முந்தைய நாள் அமெரிக்காவில் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் நாளில், இதுபோன்ற மிரட்டல்கள் அதிகரித்து வருக்கின்றன.

இந்நிலையில் தேர்தல் நாளில் அமெரிக்காவை நோக்கி வடகொரியா ஏவுகணை வீசக்கூடும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 3,000 கி.மீ. வரை செல்லக்கூடிய மசூடன் ஏவுகணையை வடகொரியா ஏவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஏவுகணை அமெரிக்காவின் குவாம் மாநிலம் வரை செல்லக்கூடியது.

கடந்த சில நாட்களாக வடகொரியாவின் பயோன்கன் மாநிலத்தில் ஏவுகணைகள் தென்பட்டதாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. கடந்த மாதம், அப்பகுதியில் இருந்துதான், வடகொரியா தனது அண்மை ஏவுகணையை ஏவியது என்பது குறிப்பிடத்தக்கது.