உலகமே பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கி, விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து கொண்டு இருக்கிறது.
இதில் நியூஹேம்ப்ஷையர் மாநிலத்தில் உள்ள டிக்ஸ்வில்லி நோட்ச் நகரில் நடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் முதல் வெற்றியை ருசித்தார்.
அமெரிக்காவில் கிழக்குபகுதி மாநிலங்களான, நியூஜெர்சி, புளோரிடா, வாஷிங்டன் உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்கெடுப்பு தொடங்கி நடந்து வருகிறது. காலை 6 மணி முதல் அனைத்துமாநிலங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தவுடன் அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் முடிவு குறித்து அறிவிக்கப்படும். எப்படிப்பார்த்தாலும், இந்த 9 மாநிலங்களில் தேர்தல் முடிவு நாளை அதிகாலை 3 மணிக்கு தெரிந்துவிடும்.
இதில் கனடா நாட்டு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நியூ ஹேம்ப்ஷையர் மாநிலம், டிக்ஸ்வில்லி நாட்ச் கிராமத்தில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மொத்தம் 8 வாக்காளர்கள் இருக்கும் இந்த ஊரில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது.
இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி 4 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குடியரசுக்கட்சி வேட்பாளர் டிரம்ப் 2 வாக்குகளையும், லிபரட்டேரியன் கட்சிக்கும், கேரி ஜான்சனுக்கும் தலா ஒரு வாக்கு கிடைத்தன.
2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில், ஹிலாரி கிளிண்டனுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.
