US Election | வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு குவியும் நன்கொடை! ஒரே நாளில் குவிந்த 677.6 கோடி!
அமெரிக்கா அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், நிதி திரட்டும் பணியை தொடங்கிய தொடங்கிய நிலையில் முதல் 24 மணி நேரத்தில் மட்டும் அக்கட்சிக்கு ₹677.6 கோடி நன்கொடை குவிந்துள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அந்நாட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் ஜனநாயக்கட்சியின் சார்பாக முதலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் விலகியதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் அதிபர வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிபர் பதவியை பிடிக்க இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சிலர் ஜோபைடன் தேர்தலில் இருந்து விலகக்கோரி அதிருப்தி தெரிவித்து வந்தனர். இதனிடையே, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. அவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்தோடு உயிர்தப்பினார்.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து, ஜோபைடன் தேர்தலில் இருந்து விவகுவதாகவும், தனக்கு பதிலாக கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தார். அதன் பின்னர், கமலா ஹாரிஸ் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
Joe Biden : திடீர் திருப்பம்.. அமெரிக்கா அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்- காரணம் என்ன.?
இந்நிலையில், தேர்தல் நிதி திரட்டும் பணியை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தொடங்கியுள்ளார். ஒரே நாளில் 24 மணி நேர முடிவில் அக்கட்சிக்கு 677.6 கோடி ரூபாய் குவிந்துள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் மிக அதிக அளவில் தேர்தல் நன்கொடை குவிந்திருப்பது அமெரிக்க தேர்தல் பிரச்சார வரலாற்றில் இதுவே முதல் முறை. அதிபர் ஜோ பைடன் தேர்தல் நிதி திரட்டியபோது நன்கொடையாளர்கள் இவ்வளவு தாராளமாக நிதி வழங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.