Joe Biden : திடீர் திருப்பம்.. அமெரிக்கா அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்- காரணம் என்ன.?
அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தல்
அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக்கட்சி சார்பாக தற்போதை அதிபர் ஜோபைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் ட்ரம்ப் நேரடியாக களத்தில் இருந்தனர். இந்த தேர்தலில் ட்ரம்பை வீழ்த்தி மீண்டும் அதிபர் பதவியை பிடிக்க தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்தது. ஒரு கட்டத்தில் டொனால்டு ட்ரம்ப் உடன் நடைபெற்ற நேரடி விவாதத்தில் ஜோபைடனால் சரியாக ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து ஜனநாயக கட்சியினரே ஜோபைடன் மீது அதிருப்தி தெரிவித்தனர். ஜோபைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கூறிவந்தனர். ஆனால் தான் போட்டியிட இருப்பதாக உறுதியாக தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் தான் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Joe Biden: மனைவி என நினைத்து; வேறு ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கச் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!!
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஜோபைடன் அறிவித்துள்ளார். 81 வயதாகும் ஜோபைடன் வயதை கருத்தில் கொண்டு விலகியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியில் இருந்து விலகுகிறேன். அமெரிக்க அதிபர் பதவியில் மீதமுள்ள காலத்தில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். இந்த விலகல் முடிவு ஜனநாயக கட்சி மற்றும் அமெரிக்க நாட்டின் நிலன் சார்ந்து நான் எடுத்துள்ள முடிவு என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அமெரிக்க அதிபராக பணியாற்றுவது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என கூறியுள்ளார்.
இந்தநிலையில் என்னை மீண்டும் அமெரிக்கஅதிபராக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளவர், என்னுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து நான் விலகியுள்ள நிலையில் இம்முறை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு எனது முழு ஆதரவை வழங்க விரும்புகிறேன். எனவே ஜனநாயககட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து டொனால்ட் ட்ரம்பை வீழ்த்த வேண்டும் என பைடன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.