ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடரும் நாடுகளுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதிகளவில் பாதிக்கப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றது முதல் வரி விதிப்பு விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். இந்தியா உட்பட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்த அவர், தற்போது அந்த வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வர வாய்ப்பு
இந்த நிலையில், ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முழு ஆதரவும் உள்ளதாக குடியரசுக் கட்சி எம்.பி. லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
"நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள், உக்ரைனுக்கு உதவவில்லை என்றால், அமெரிக்காவிற்குள் வரும் உங்கள் பொருட்களுக்கு 500% வரி விதிக்கப்படும். இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்துதான் 70% கச்சா எண்ணெயை வாங்குகின்றன. அவர்கள்தான் புடினின் போர் இயந்திரத்தை தொடர்ந்து இயக்குகிறார்கள்" என லிண்ட்சே கிரஹாம் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கும் வகையில், இந்த மசோதா ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது .
இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகமாக வாங்கும் இந்தியா மற்றும் சீனாவை கடுமையாக பாதிக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கை மருந்துகள், ஜவுளி மற்றும் ஐடி சேவைகள் போன்ற ஏற்றுமதிகள் மீதான வரிகளும் ஆபத்து உள்ளது.
இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்கா 500 சதவீதம் வரை வரி விதிக்க வாய்ப்புள்ளது. தற்போது, இந்தியாவும் சீனாவும் தங்கள் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 70 சதவிகிதத்தை ரஷ்யாவிடம் இருந்து இறங்குமதி செய்து வருகின்றன. புதிய வரி விதிப்பு, இரு நாடுகளின் பொருளாதாரத்தின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மூன்றாவது ஆண்டில், அதாவது 2024 பிப்ரவரிக்குப் பிறகு, இந்தியா ₹4,40,945 கோடி (தோராயமாக ஐரோப்பிய யூரோ 49 பில்லியன்) மதிப்பிலான கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
பாரம்பரியமாக, இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளுக்கு மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்து இருந்தது. ஆனால், 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது. தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் கிடைத்ததால், ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையர்களில் ஒன்றாக மாறியது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ள சூழலில் அமெரிக்காவின் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
