Russia Ukraine War: பங்கம் செய்த அமெரிக்கா - ரஷ்ய ஏவுகணை எல்லாம் டம்மி பாவா...!
Russia Ukraine War: இத்துடன் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததற்கு எந்த விதமான காரணத்தையும் அவர்கள் கூறவில்லை.
நேட்டோவைில் இணையும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய ஏவுகணைகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இலக்குகளை சரியாக தாக்காமல், செயலிழந்து போவதாக அமெரிக்கா கருத்து தெரிவித்து உள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் பற்றிய விவரம் அறிந்த மூன்று அமெரிக்க அதிகாரிகள் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்து இருக்கின்றனர். அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து இருக்கும் இந்த கருத்துக்கள், கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியும் ரஷ்யாவால் இன்றுவரை உக்ரைன் வான் படையை வீழ்த்த முடியாததற்கு காரணமாக அமைந்து விட்டன.
மிக முக்கிய விவரங்களை தெரிவிப்பதால், அமெரிக்க அதிகாரிகள் தங்களின் விவரங்களை கூற மறுத்து விட்டனர். மேலும் தங்களின் கருத்துக்களுக்கும் எந்த விதமான ஆதாரங்களையும் அவர்கள் வழங்கவில்லை. இத்துடன் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததற்கான காரணத்தையும் அவர்கள் கூறவில்லை. இதன் காரணமாக இந்த தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.
இதுபற்றிய கேள்விக்கு ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஏவுதல் தோல்வி, சரியான இலக்கை தாக்க முடியாத நிலை என ஏவுகணை செயலிழப்புக்கு எந்த காரணத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். போர் தொடங்கியது முதல் இதுவரை ஆயிரத்து 100-க்கும் அதிக ஏவுகணைகளை ரஷ்யா உக்ரைன் மீது ஏவி தாக்குதலை நடத்தி இருக்கிறது. இதில் எத்தனை ஏவுகணைகள் சரியான இலக்கை வெற்றிகரமாக தாக்கின, எத்தனை ஏவுகணைகள் செயலிழந்தோ அல்லது சரியான இலக்கை தாக்காமல் போனதோ என்ற தகவல் எதுவும் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுவரையிலான ஆய்வுகளின் படி ரஷ்ய ஏவுகணைகளின் வெற்றி சதவீதம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருந்தது. இதற்கு ரஷ்யா ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் ஏவுகணைகளே காரணம் ஆகும். சில நாட்களில் ரஷ்ய ஏவுகணைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் செயலிழந்து போயிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். நாளுக்கு நாள் ரஷ்யா கப்பலில் இருந்து ஏவிய ஏவுகணைகள் 20 முதல் 60 சதவீதம் வரை செயலிழந்தது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதுவரை நடத்திய தாக்குதல்களில் ரஷ்யா Kh-555 மற்றும் Kh-101 என இரண்டு விதமான ஏவுகணைகளை கப்பலில் இருந்து ஏவி வருகிறது. ஏவுகணை தாக்குதல்கள் தோல்வியில் முடியும் சதவீதம் பற்றி கூறும் போது, 20 சதவீதத்திற்கும் அதிக செயலிழப்புகள் மிகவும் மோசமானவை என ஆயுத பிரிவு வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.