ஜம்மு- காஷ்மீர் சிறப்பி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மக்மூது குரேஷி ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மக்மூது குரேஷி, இந்தியாவின் செயல் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மரபுகளுக்கு எதிரானது என்றும் ஒரு ஐநா சபை அமர்வில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் ஊடகங்களில் தெரிவித்து இருந்தார். எங்கள் பாதுகாப்பிற்காக எந்த அளவிற்கும் செல்வோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், காஷ்மீர் விஷயத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். குரேஷியின் கடிதம் வரும் முன்னதாகவே, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இருதரப்பும் பேசி தீர்வு காண வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் அழைப்பு விடுத்திருந்தார்.