நிலவில் உங்கள் பெயரும் இடம்பெற வேண்டுமா? நாசா வழங்கும் அரிய வாய்ப்பு! முற்றிலும் இலவசம்!!
நாசா, தனது ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தின் மூலம் பொதுமக்களின் பெயர்களை நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்ப ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் பதிவு செய்வது முற்றிலும் இலவசம். பதிவு செய்தவர்களுக்கு ஒரு டிஜிட்டல் போர்டிங் பாஸ் வழங்கப்படும்.

நிலாவில் பெயரைப் பதிவுசெய்யலாம்!
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA), ஆர்ட்டெமிஸ் 2 (Artemis 2) திட்டத்திற்காகப் பொதுப் பதிவைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், உலகம் முழுவதிலும் உள்ள எவரும் தங்கள் பெயரை நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பலாம்.
இத்தகைய பெரிய அளவில் இந்த முயற்சி நடைபெறுவது இதுவே முதல் முறை. விண்வெளி ஆர்வலர்கள் இந்தத் திட்டத்தில் ஆர்வத்துடன் தங்கள் பெயரைப் பதிவுசெய்து வருகிறார்கள்.
உங்கள் பெயரை நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்ப எவ்வாறு பதிவு செய்வது, அதற்கான கட்டணம் என்ன என்பதை இங்கு காணலாம்.
'நிலவு அனுமதிச் சீட்டு' (Lunar Pass) பெறுவது எப்படி?
நாசா ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் பதிவுசெய்வதற்காக ஒரு சிறப்பு வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் பதிவு செய்வது முற்றிலும் இலவசம் ஆகும். பதிவு செய்யும் அனைவரின் பெயர்களும் ஒரு டிஜிட்டல் மெமரி கார்டில் சேமிக்கப்பட்டு, ஓரியன் (Orion) விண்கலத்துடன் நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படும்.
பதிவு செய்தவுடன், நாசா உங்களுக்கு ஒரு டிஜிட்டல் போர்டிங் பாஸ் (Digital Boarding Pass) வழங்கும். இது உங்களுக்கு ஒரு மறக்க முடியாத விண்வெளி நினைவுப் பரிசாக இருக்கும்.
பதிவு செய்ய, நாசாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, சில அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து உங்கள் நிலவு அனுமதிச் சீட்டைப் (Lunar Pass) பெறலாம்.
ஆர்ட்டெமிஸ் 2 என்றால் என்ன?
ஆர்ட்டெமிஸ் 2 திட்டம், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தில் ஒரு மிக முக்கியமான பகுதியாகும். இத்திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்கள் ஓரியன் விண்கலத்தில் சுமார் 10 நாள் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வார்கள்.
இதில் பங்கேற்கும் 4 விண்வெளி வீரர்கள் கிறிஸ்டினா கோச், ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர் மற்றும் ஜெரமி ஹேன்சன் ஆவர். இந்தத் திட்டம் பிப்ரவரி 5, 2026 விண்ணில் ஏவப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயணத்தின்போது, எதிர்காலத்தில் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பவும், அதைத் தொடர்ந்து செவ்வாய் கிரகப் பயணங்களுக்கான தயாரிப்புகளை வலுப்படுத்தவும், நிலவின் சுற்றுப்பாதைக்கு அருகில் விண்கலத்தின் ஒட்டுமொத்த அமைப்புகளும் சோதிக்கப்படும்.

