மனிதநேய அடிப்படையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம்: ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
காசா போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் இந்த வாக்களிக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் காசா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில் ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் கிடைத்தன. இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.
இஸ்ரேல் காசாவில் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகளை துண்டித்து, தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ள நிலையில், ஐ.நா. பொதுச்சபையில் இந்த வாக்கெடுப்பு நடந்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் பெயரைக் குறிப்பிடாமலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
காசாவில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கு கேரண்டி கிடையாது! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
அமெரிக்கா, ஆஸ்திரியா, குரோஷியா, செக்கியா, பிஜி, குவாத்தமாலா, ஹங்கேரி, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, நவுரு, பப்புவா நியூ கினியா, பராகுவே மற்றும் டோங்கா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. மறுபுறம், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஈராக், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, தென் கொரியா, சுவீடன், துனிசியா, உக்ரைன் மற்றும் இங்கிலாந்து உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை.
காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது, பணயக் கைதிகளாக உள்ள அனைத்து பொதுமக்களையும் விடுவித்தல், பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் நிவாரண உதவிகள் காசா பகுதிக்குள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்தல் ஆகியவை தீர்மானத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களுக்கு பரவலான சர்வதேச ஆதரவு இருப்பதை இத்தீர்மானம் உணர்த்துகிறது. ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினர் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலை ராக்கெட் வீசித் தாக்கினர். மேலும் இஸ்ரேலிய பகுதிக்குள் ஊடுருவி, 1,400 பேரைக் கொன்றனர். இதற்காக இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் மீது பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது. இந்தத் தாக்குதல்களால் சுமார் 7,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D