Russia Ukraine War: நேட்டோவில் இணைய போவதில்லை.. மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு..
Russia Ukraine War: உக்ரைன் நாடு நேட்டோ இராணுவ அமைப்பில் இணைய போவதில்லை என்பதை உக்ரைன் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா- உக்ரைன் போர்:
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 20 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் இந்த தாக்குதலில் மருத்துவமனை, மக்கள் குடியிருப்புகள் என பல்வேறு கட்டிடங்கள் உருகுலைந்துள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்களான சுமி, கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனை சுற்றி வளைத்த ரஷ்யா, தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
25 லட்சம் மக்கள் வெளியேற்றம்:
போர் காரணமாக உக்ரைனிலிருந்து கிட்டதட்ட 25 லட்சம் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளான போலந்து,ரூமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனிலிருந்து ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 22,500 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மேலும் படிக்க: Ukraine crisis : குடியிருப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்... உக்ரைனின் கீவில் பொதுமுடக்கம் அமல்!!
பேச்சுவார்த்தை தோல்வி:
இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியையே தழுவிய நிலையில், அங்கு போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் இராணுவமும் ரஷ்ய படைகளை எதிர்த்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் பெருமளவில் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள ரைவ்னே நகருக்கு வெளியே அமைந்துள்ள தொலைக்காட்சி கோபுரம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 9 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பு:
இதனிடையே ரஷ்ய படை உக்ரைனின் கார்கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும், மிக பெரிய அணு நிலையங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்டு செய்தி குறிப்பில், நேட்டோவில் இணைய போவதில்லை என்ற உண்மையை உக்ரைன் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உக்ரைன் அரசு தெரிவித்திருப்பதாக வெளியிட்டுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொளி முறையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நாளை உரையாற்ற உள்ளார். இந்த உரை அமெரிக்க மக்களுக்கும் நேரலையில் ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை காக்க போராடிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் தலைவர் தங்கள் அவையில் பேசுவது பெருமைக்குரியது என நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் மனு... நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது சர்வதேச நீதிமன்றம்!!