யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல்!
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது
யுஇஎஃப்ஏ ஐரோப்பிய சாம்பியன்ஷிப், ஃபிஃபா உலகக் கோப்பைக்குப் பிறகு உலகிலேயே அதிகம் பார்க்கப்படும் போட்டி யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் எனும் கால்பந்து போட்டி. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் யூனியனால் நடத்தப்படும் கிளம் போட்டியானது, உலகின் மிகவும் மதிப்புமிக்க கால்பந்து போட்டிகளில் ஒன்றாகும்.
இந்த நிலையில், யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது. யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டிகளின் முதல் கட்டப் போட்டியை நடத்தும் நான்கு மைதானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் செய்திகளை வெளியிடும் ஊடகமான அல் அஸெய்ம் அறக்கட்டளை, பார்க் டெஸ் பிரின்சஸ், சாண்டியாகோ பெர்னாபியூ, மெட்ரோபொலிட்டன் மற்றும் எமிரேட்ஸ் ஸ்டேடியம் ஆகிய மைதானங்களை தாக்கப் போவதாக அச்சுறுத்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், ‘அனைவரையும் கொல்லுங்கள்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 30ஆம் தேதியன்று, பேயர்ன் முனிச் மற்றும் பொருசியா டார்ட்மண்ட் ஆகிய அணிகளுக்கு இடையே, முனிச்சில் உள்ள அலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது, தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ்ஐஎஸ் சார்பு ஊடகமான சார் அல்-கிலாஃபா செய்தி வெளியிட்டது என்பது கவனிக்கத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டிகளின் முதல் கட்டப் போட்டியை நடத்தும் நான்கு மைதானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். கடைசியாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் அரங்கில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற இசைக் கச்சேரியின் போது தாக்குதல் நடத்தினர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி: டெல்லி உயர் நீதிமன்றம்!
இந்த நிலையில், தற்போதைய அச்சுறுத்தலானது அதிகாரிகள் மற்றும் கால்பந்து ரசிகர்களிடையே கவலையைத் தூண்டியுள்ளது. இருப்பினும், போட்டியை காண ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். போட்டிகளில் கலந்துகொள்ளும் ரசிகர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பாதுகாப்புப் பணியாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.