ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், மோதல் தொடர்பாக பொய்யான வீடியோகளை பரப்பி பதற்றத்தை உருவாக்கியதற்காக 19 இந்தியர்களை UAE கைது செய்தது பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

தற்போது பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து, சமூக ஊடகத் தளங்களில் தவறான அல்லது ஜோடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளைப் பதிவிட்டதற்காக 19 இந்தியர்கள் உட்பட 35 நபர்களை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி, தற்போதைய பதற்றமான சூழல் தொடர்பாகத் திருத்தப்பட்ட (manipulated) வீடியோக்களையும் கதைகளையும் பரப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீதான விசாரணை முடுக்கிவிடப்பட்டு, விரைவு நீதிமன்ற விசாரணை (expedited trial) நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தால் (UAE) கைது செய்யப்பட்டவர்கள் யார்?

மேற்கு ஆசியாவில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழலில், சமூக ஊடகங்களில் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட வீடியோக்களைப் பதிவிட்டதாக 19 இந்தியர்கள் உட்பட 35 நபர்களைக் கைது செய்ய ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இரண்டு கட்டங்களாக அதிரடி நடவடிக்கை

முதல் கட்டம்: கடந்த சனிக்கிழமை அன்று இரண்டு இந்தியர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட உத்தரவிடப்பட்டது.

இரண்டாம் கட்டம்: அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட புதிய பட்டியலில், 17 இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏன் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்?

தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஈரான் போரை மையப்படுத்தி, சமூக ஊடகங்களில் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட வீடியோக்களைப் பரப்பியதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசு இவர்களைக் கைது செய்துள்ளது. பொதுமக்களைத் தூண்டிவிடும் வகையிலும், பிராந்திய அமைதியைக் குலைக்கும் வகையிலும் செயல்படும் AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட போலியான உள்ளடக்கங்களைக் கண்காணித்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமீரக தலைமை அரசு வழக்கறிஞர் ஹமத் சைப் அல் ஷம்சி தெரிவித்துள்ளார்.

மூன்று குழுக்களாகப் பிரிந்து செயல்பட்ட..

முதல் குழு (10 பேர்): இதில் 5 இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் ஏவுகணைகள் இடைமறிக்கப்படும் உண்மையான வீடியோக்களைப் பதிவிட்டு, அவற்றுடன் பயங்கரமான சத்தங்களையும் வதந்திகளையும் சேர்த்து, மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க முயன்றனர். இது நாட்டின் பாதுகாப்புத் திறனை எதிரிகளுக்கு வெளிப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியது.

இரண்டாம் குழு (7 பேர்): இதில் 5 இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெடிப்புகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற போலியான காட்சிகளை உருவாக்கினர். மற்ற நாடுகளில் நடந்த விபத்துகளை அமீரகத்தில் நடந்தது போல் சித்தரித்து வதந்தி பரப்பினர்.

மூன்றாம் குழு (6 பேர்): இதில் 5 இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் அமீரகத்திற்கு எதிராகச் செயல்படும் ஒரு நாட்டுக்கு (ஈரான்) ஆதரவாகவும், அந்த நாட்டின் ராணுவ நடவடிக்கைகளைப் புகழ்ந்தும் பதிவுகளை வெளியிட்டனர். இது அமீரகத்தின் தேசிய நலனுக்கு எதிரானது எனக் கருதப்படுகிறது.

தண்டனை விவரம்

ஐக்கிய அரபு அமீரகச் சட்டப்படி, இத்தகைய குற்றங்களுக்குக் குறைந்தது ஒரு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 1,00,000 திர்ஹம் (சுமார் ₹25.2 லட்சம்) அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய சூழல் என்ன?

ஈரான் தனது அண்டை நாடான அமீரகத்தின் மீது முதல்முறையாக மிரட்டல் விடுத்த ஒரு நாளில், வளைகுடா நாடுகளில் புதிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு (Kharg Island) மீது தாக்குதல் நடத்த, அமெரிக்கா அமீரகத்தின் துறைமுகங்களைப் பயன்படுத்தியதாக ஈரான் ஆதாரமின்றி குற்றம் சாட்டியுள்ளது.