“கடவுளின் கோபத்திலிருந்து இஸ்ரேல் தப்ப முடியாது..” என அறிவித்த துருக்கி எம்.பி.க்கு மாரடைப்பு.. வீடியோ..
“கடவுளின் கோபத்திலிருந்து இஸ்ரேல் தப்பிக்க முடியாது" என்று கூறிய பிறகு துருக்கி எம்பிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
துருக்கி பாராளுமன்றத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போதே எம்.பி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Saadet கட்சியின் தலைவர் ஹசன் பிட்மேஸ் இதுகுறித்து பேசிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்துள்ளார். கீழே விழுவதற்கு முன்பு பேசிய அவர் "நாம் ஒருவேளை நம் மனசாட்சியிடம் இருந்து உண்மையை மறைக்கலாம் ஆனால் வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது. கடவுளின் கோபத்திலிருந்து இஸ்ரேல் தப்பிக்க முடியாது" என்று அவர் கூறினார்.
பேசி முடித்த உடன் அவர் மயங்கி விழும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பிட்மேஸ் மயக்கமடைந்து கீழே கிடப்பதையும் பார்க்க முடிகிறது. உடனடியாக அங்கு சென்ற அவசர உதவியாளர்கள் அவருக்கு CPR முதலுதவி வழங்கினர், பின்னர் அவர் ஸ்ட்ரெச்சரில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். 2 இதய ஸ்டெண்ட்களை கொண்ட நீரிழிவு நோயாளியான பிட்மேஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பிட்மேஸ் அங்காராவில் உள்ள பில்கென்ட் சிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அவருக்க்கு அங்கு ஆஞ்சியோகிராஃபி செய்யப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு துருக்கிக்கும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தான் இரு நாடுகளும் உறவுகளை இயல்பாக்கியது, ஆனால் ஹமாஸ் அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு உறவுகள் மோசமடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலின் இராணுவப் பிரச்சாரத்திற்கு எதிராக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுத்தாலும், துருக்கி மக்களில் சிலர் இந்த நடவடிக்கை போதாது என்று நம்புகின்றனர்.
பாலஸ்தீன மக்களை கண்ணைக் கட்டி நிர்வாணமாகக் கூட்டிச் சென்ற இஸ்ரேல் ராணுவம்!
கடந்த மாதம், துருக்கி அதிபர் எர்டோகன் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை "காசாவின் கசாப்புக் கடைக்காரர்" என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் உலகம் முழுவதும் யூத-விரோதத்தை தோற்றுவிப்பதாக குற்றம் சாட்டினார். ஹமாஸ் போராளிகளின் தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடியால் ஏற்பட்ட மரணம் மற்றும் அழிவு குறித்து எர்டோகன் பலமுறை இஸ்ரேலை வசைபாடினார். அவர் இஸ்ரேலை "பயங்கரவாத நாடு" என்று முத்திரை குத்திய அவர், ஹமாஸை "ஒரு விடுதலைக் குழு" என்று அழைத்தார்.
இஸ்ரேல் தற்போது காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு தாக்குதலை நடத்தி வருகிறது. பல வாரங்களாக தாக்குதல் நீடித்து வரும் நிலையில் காசாவில் 17,700 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசாவின் 2.3 மில்லியன் மக்களில் சுமார் 90 சதவீதம் பேர் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்திற்குள் இடம்பெயர்ந்துள்ளனர், அங்கு தப்பிச் செல்வதற்கு பாதுகாப்பான இடம் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகள் கூறுகின்றன.
அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர், சுமார் 240 பேரை பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இந்த போரில் ஒரு முக்கிய மத்தியஸ்த பாத்திரத்தை வகித்த கத்தார், போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடரும் மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் என்று தெரிவித்து வருகிறது, ஆனால் போர்நிறுத்தம் பற்றி விவாதம் நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.