பாகிஸ்தானுக்கு எந்நிலையிலும் ஆதரவு கொடுப்போம் என துருக்கி மீண்டும் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான மோதலில் பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி செய்தது.

Turkey support Pakistan: இந்தியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆயுதங்கள் மற்றும் படைவீரர்களை வழங்கியதால் இந்தியாவின் புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ள போதிலும், துருக்கி பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. துருக்கி பிரதமர் எர்டோகன் இதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். நல்லது கெட்டது என எப்போதும் பாகிஸ்தானுக்கு துணை நிற்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸிடம் துருக்கி பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு

இதுகுறித்து எர்டோகன், பாகிஸ்தானுடனான நட்பு அசைக்க முடியாதது என்றார். முன்பு போலவே, எதிர்காலத்திலும் நல்ல நேரங்களிலும் கெட்ட நேரங்களிலும் நாங்கள் உங்களுடன் இருப்போம். துருக்கி-பாகிஸ்தான் சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு, பாகிஸ்தானின் அமைதிக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த நட்பு தொடர வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ஷெபாஸ் ஷெரீப், இந்த சகோதர உறவைப் பற்றி பெருமைப்படுகிறேன். எர்டோகனின் ஆதரவு, பாகிஸ்தானுடனான நட்பு மனதைத் தொட்டது' என்றார்.

துருக்கி பாகிஸ்தானுக்கு என்னென்ன உதவி செய்தது?

இந்தியாவுக்கு எதிரான மோதலின்போது பாகிஸ்தான் அதிக அளவில் துருக்கி உற்பத்தியான சோங்கர் டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்தியா இதை ஆதாரங்களுடன் சொன்னபோதும் பாகிஸ்தான் அதை மறுத்தது. இது போக, மோதல் தொடங்குவதற்கு முன்பாகவே துருக்கியின் போர்க்கப்பல் கராச்சி துறைமுகத்தில் இருந்தது. மேலும் தாக்குதல் முடிந்தபிறகு துருக்கி விமானப் படையின் சி-130 விமானம் பாகிஸ்தானில் தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு துரோகம் செய்த துருக்கி

2023 ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு முதலில் உதவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆபரேஷன் தோஸ்த் (நண்பன்) என்ற பெயரில் இந்தியா துருக்கிக்கு பொருட்களை அனுப்பியது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மோப்ப நாய்களையும் அனுப்பியது. ஆனால் இதையெல்லாம் மறந்த துருக்கி இந்தியாவுக்கு உதவி செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிராக நிற்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுப்பதாக மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளது.

துருக்கிக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கை

துருக்கி பாகிஸ்தானுக்கு எதிரான ஆதரவை மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ள நிலையில், துருக்கியுடன் நட்புறவை கைவிட இந்தியா முடிவு செய்துள்ளது. துருக்கிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் உள்ள துருக்கி நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ரத்து செய்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு துருக்கி கல்வி நிலையங்களுடன் இருந்த ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.