Turkey earthquake: உத்தராகண்டில் துருக்கியைப் போன்ற நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு; நிலநடுக்க வல்லுநர் எச்சரிக்கை
துருக்கி, சிரியாவில் ஏற்பட்டதைப் போன்ற அதிபயங்கர நிலநடுக்கம் இந்தியாவிலும் எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்று விஞ்ஞானி ராவ் எச்சரிக்கிறார்.
துருக்கியில் ஏற்பட்டதைப் போன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படக்கூடும் என்று தேசிய புவிசார் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் (National Geophysical Research Institute) நிலநடுக்கவியல் (seismology) தலைமை விஞ்ஞானி டாக்டர் என். பூர்ணச்சந்திர ராவ் கூறியுள்ளார்.
செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருக்கும் ராவ், உத்தரகாண்ட் பிராந்தியத்தில் நிலப்பரப்பிற்கு அடியில் அதிக அறளவு அழுத்தம் உருவாகி வருவதாகவும், அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்போது ‘பெரும் பூகம்பம்’ தவிர்க்க முடியாதது எனவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், நிலநடுக்கத்தின் தேதி மற்றும் நேரத்தை கணிக்க முடியாது என்றும் நிலநடுக்கம் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பல புவியியல் காரணிகளைப் பொறுத்தது மாறுபடும் என்றும் கூறினார்.
“நாங்கள் உத்தரகாண்டில் கவனம் செலுத்தி இமயமலைப் பகுதியில் சுமார் 80 நில அதிர்வு நிலையங்களை அமைத்துள்ளோம். அப்பகுதிகளில் நிலைமையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறோம். நிலத்தில் அழுத்தம் அதிகமாகிவருவதை எங்கள் தரவுகள் காட்டுகின்றன” என்றும் ராவ் சொல்கிறார். மேலும், “எங்களிடம் ஜிபிஎஸ் நெட்வொர்க்குகள் உள்ளன. அதில் ஏற்படும் நகர்வு மூலமும் நிலத்திற்கு அடியில் நடக்கும் மாற்றங்களைக் கவனிக்கிறோம்” என்கிறார்.
பைக் டாக்சி சேவைகளுக்கு தடை... மீறினால் ரூ.10,000 வரை அபராதம்... அரசு அதிரடி உத்தரவு!!
வேரியோமீட்டர்கள் (Variometers) பூமியின் காந்தப்புலத்தில் உள்ள மாறுபாடுகளை அளவிடுகின்றன. வேரியோமெட்ரிக் ஜிபிஎஸ் (Variometric GPS) தரவுகள் பூமியில் என்ன நடக்கிறது என்பதை அறியும் நம்பகமான வழிமுறைகளில் ஒன்றாகும் என்கிறார் ராவ். “நிலநடுக்கம் ஏற்படும் சரியான நேரத்தையும் தேதியையும் எங்களால் கணிக்க முடியாது. ஆனால் உத்தரகாண்ட்டில் எந்த நேரத்திலும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும்” என்று ராவ் எச்சரிக்கிறார்.
பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் போன்ற ஆன்மிக யாத்திரை செல்லும் தலங்களுக்கு நுழைவாயிலாகக் கருதப்படும் ஜோஷிமத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் பின்னணியில் விஞ்ஞானி ராவ் தெரிவித்துள்ள கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. லட்சக்கணக்கான ஆன்மிக யாத்திரை பயணிகள் உத்தரகாண்ட் மலைப்பாதைகள் வழியாகச் செல்லும் சார் தாம் யாத்திரை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் வரை பதிவானது. 46 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இந்தப் பேரிடரில் இரு நாடுகளிலும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஐ.நா. சபை துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை நூறாண்டுகளில் இல்லாத மாபெரும் பேரிடராக அறிவித்துள்ளது.