அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமாக அட்லான்ட்டிக் நகரில் உள்ள டிரம்ப் தாஜ்மஹால் சூதாட்ட விடுதி இன்று மூடப்படும் எனத் தெரிவிக்‍கப்பட்டள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக்‍கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், கடந்த 1990-ம் ஆண்டு அட்லான்ட்டிக் நகரில் மிக பிரமாண்டமான சூதாட்ட விடுதி ஒன்றை தொடங்கினார். இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலைப் போன்ற வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த விடுதிக்கு 'டிரம்ப் தாஜ்மஹால்' என அவர் பெயரிட்டிருந்தார்.

சுமார் 26 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த இந்த சூதாட்ட விடுதியில், 3 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர். அட்லான்ட்டிக் நகரின் சமீபத்திய சட்டங்களின்படி இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வுகால பலன்களை வழங்க இந்த விடுதியின் நிர்வாகம் மறுத்து விட்டதையடுத்து, இதன் பணியாளர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கம் கடந்த ஜூலை மாதம் முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், டிரம்ப் தாஜ்மஹால் நிர்வாகத்துக்கும் இடையே நடைபெற்ற பலசுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, இன்று டிரம்ப்பின் தாஜ்மஹால் சூதாட்ட விடுதி இழுத்து மூடப்படுகிறது.