- Home
- உலகம்
- H-1B Visa: அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. H-1B விசா ஊழியர்களுக்கு நிம்மதி தரும் தகவல்!
H-1B Visa: அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. H-1B விசா ஊழியர்களுக்கு நிம்மதி தரும் தகவல்!
H-1B Visa: அமெரிக்காவில் 50%க்கும் மேல் H-1B ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், விசா நீட்டிப்புக்கு $4,000 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், திறமையான ஊழியர்களை நிறுவனங்கள் நீக்காது என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

H-1B ஊழியர்களுக்கு நிம்மதி தரும் தகவல்
அமெரிக்காவில் H-1B விசாக்களை நீட்டிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டணத்தால், நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை பணியில் இருந்து நீக்க வாய்ப்பில்லை. காரணம், இந்த கூடுதல் கட்டணத்தைச் செலுத்துவது, ஒரு திறமையான ஊழியரை இழந்துவிட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஒருவரைத் தேடும் செலவை விடக் குறைவுதான் என்கிறார் 'Build' நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO டேனியல் கோல்ட்மேன்.
செப்டம்பர் 9 முதல் புதிய விதிகள் அமல்
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS), ஏற்கனவே உள்ள H-1B மனுக்களுக்கான 4,000 டாலர் கட்டணத்தையும், L-1 மனுக்களுக்கான 4,500 டாலர் கட்டணத்தையும், சில விசா நீட்டிப்பு விண்ணப்பங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய விதிமுறை செப்டம்பர் 9-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதி யாருக்கெல்லாம் பொருந்தும் என்றால், அமெரிக்காவில் குறைந்தது 50 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் H-1B, L-1A அல்லது L-1B விசாக்களில் பணிபுரிந்தால், அந்த நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.
திறமையான ஊழியர்களுக்கு பாதிப்பில்லை
இந்த திருத்தப்பட்ட விதிமுறையின்படி, ஒரு ஊழியர் அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்தாலும், அவருடைய விசா காலத்தை நீட்டிக்கும்போது, இந்த நிறுவனங்கள் '9/11 ரெஸ்பான்ஸ் மற்றும் பயோமெட்ரிக் நுழைவு-வெளியேறு கட்டணத்தை' செலுத்த வேண்டும். இது தொடர்பாக கோல்ட்மேன் கூறுகையில், "நிறுவனங்கள் ஏற்கனவே தக்கவைத்துக் கொள்ள விரும்பும் திறமையான ஊழியர்களை, இந்த கூடுதல் கட்டணத்துக்காக விட்டுவிடப் போவதில்லை. ஒரு ஊழியர் நிறுவனத்தில் சேர்ந்து, தனது திறமையை நிரூபித்த பிறகு, விசா நீட்டிப்பின்போதுதான் இந்தக் கட்டணம் வருகிறது" என்றார்.
புதிய ஊழியரை தேடுவதை விட இதில் செலவு குறைவு
"அரசாங்கம் அதிக கட்டணங்கள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்திருப்பதை குறைக்க நினைத்தாலும், இந்த 4,000 டாலர் என்பது ஒருவரை புதிதாக வேலைக்கு எடுக்கும்போது வருவதில்லை. மாறாக, விசா நீட்டிப்பின்போதுதான் வருகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார். அனுபவம் வாய்ந்த ஒரு ஊழியரைத் தக்கவைத்துக் கொள்வதற்கான செலவு, இந்த கூடுதல் விசா கட்டணத்தை விட நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
"ஒரு நிறுவனம் ஏற்கனவே தக்கவைக்க விரும்பும் திறமையான ஊழியருக்காக, எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய 4,000 டாலர் கூடுதல் கட்டணம், அந்த ஊழியரை இழந்து புதியவரைத் தேடும் செலவை விட நிச்சயம் பெரிதல்ல" என்றார் கோல்ட்மேன்.
தெளிவுப்படுத்திய டேனியல் கோல்ட்மேன்
இந்த விதியின் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், இதுநாள் வரை ஒருமுறை செலவாக இருந்ததை, வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் நம்பியிருக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியான செலவாக மாற்றியுள்ளது. அதே சமயம், H-1B ஊழியர்களை ஸ்பான்சர் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
செப்டம்பர் 9 முதல், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் புதிய H-1B ஊழியர்கள் அல்லது வேறு நிறுவனத்தில் இருந்து மாறும் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கனவே உள்ள ஊழியரின் விசா காலத்தை நீட்டிக்கும்போதும் இந்த கூடுதல் 4,000 டாலரைச் செலுத்த வேண்டும். நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான H-1B ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு, இந்த கூடுதல் கட்டணம் ஒரு குறிப்பிடத்தக்க தொடர் செலவாக மாறும் என்று கோல்ட்மேன் கூறினார். இந்த செய்தி அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு H-1B ஊழியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

