தேர்தலில் வெற்றி பெற்று நான் அதிபரானால், இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த நண்பர்களாக மாறுவார்கள். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டினார்.

தீவிரவாத த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நியூஜெர்சி நகரில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை குடியரசுக் கட்சியின் இந்து அமைப்பு சார்பில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் இதை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 5 ஆயிரம் இந்தியர்கள் வரை பங்கேற்றனர்.

இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக கலந்து கொண்டார். நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து அதிபர் வேட்பாளர் டிரம்ப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “ பாதுகாப்பு துறை, நிர்வாகம் ரீதியாக இந்தியா எங்களுக்கு சிறந்த நட்பு நாடு. பாதுகாப்பு, ராணுவம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி, முன்னெடுத்துச் செல்ல நான் நினைக்கிறேன். 

நான் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தால் எனது நிர்வாகத்தில் இந்தியாவும்-அமெரிக்காவும் சிறந்த நண்பர்களாக, நட்பு நாடுகளாக இருப்பார்கள்.

 எதிர்காலத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் தனிச்சிறப்புடைய நாடுகளாக திகழ்வார்கள். 

நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் பிரதமர் மோடி இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். 

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். ஏனென்றால் அவர் மிகவும் உற்சாகத்துடன், உத்வேத்துடன் அவரின் கடமைகளைச் செய்து வருகிறார். 

நான் இந்துக்களின், இந்தியாவின் மிகப் பெரிய ரசிகன். நான் அதிபரானால் இந்துக்களுக்கும், இந்தியர்களுக்கும் வெள்ளை மாளிகையில் மிகச்சிறந்த நண்பர் கிடைப்பார். இந்தியாமீதும், பிரதமர் மோடி மீதும் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. 

தீவிரவாத த்தை தொடர்ந்து அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா எதிர்த்து வருவதை நான் வரவேற்கிறேன். மும்பை தீவிரவாத தாக்குதலில் இந்தியா மிகுந்த பாதிப்பு உள்ளானதை நான் அறிவேன். 

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு தோளோடு தோள் கொடுப்போம்.இந்தியாவுக்கு தேவையான உளவுத்துறை தகவல்களை பகிர்தளித்து மக்களை பாதுகாப்பாக வைக்க உதவிடுவேன்.” என்று தெரிவித்தார்.