அமெரிக்காவில் உள்ள 40 லட்சம் இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்காக அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், தனது பிரசார யுத்தியை மாற்றியுள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போது பேசிய ‘ஆப் கி பார், மோடி சர்கார்’ என்ற வாசகம் மிகப் பிரபலமானது. இந்த வார்த்தையின் தாக்கம் வட மாநிலங்களில் பல கிராம மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது.

அதை அப்படியே காப்பி அடித்து, ‘ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்’ என்று டிரம்ப் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து வருகிறார்.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் அமெரிக்க இந்தியர்களை குறிவைத்து பிரசாரம் செய்யப்படுவது இதுதான் முதல்முறையாகும். பொதுவாக அமெரிக்காவில் வசிக்கும் 40 லட்சம் இந்தியர்கள் பாரம்பரியமாக ஜனநாயகக் கட்சிக்கே ஆதரவாக வாக்களிப்பார்கள்.

இதில் 10 லட்சம் இந்தியர்கள் வேண்டுமானால், குடியரசுக் கட்சிக்கு மாறி வாக்களிக்கலாம். ஆனால், இந்த முறை அனைத்து மக்களின் ஆதரவைக் கவரும் நோக்கில் டிரம்ப் புதிய உத்தியில் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்.

தொலைக்காட்சிகளில் 30 வினாடிகளில் மட்டுமே ஓடக்கூடிய இந்த பிரசார விளம்பரத்தின் இறுதியில், ‘ ஆப் கி பார், டிரம்ப் சர்கார்’ என்ற வாசகத்துடன் முடிகிறது.

“ 30 வினாடிகள் ஓடும் இந்த விளம்பரம் 20 சேனல்களில் ஒளிபரப்பாகிறது'' என இந்திய அமெரிக்க ஆலோசனைக்குழுவின் தலைவர் சலாப் குமார் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் இந்துக்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றிலும் கடந்த வாரம் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியை புகழ்ந்தும், அவரின் ஆட்சியையும், நிர்வாக சீர்திருத்ததையும் புகழந்தார். தான் அதிபரானால், இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள் என்று பேசினார். அமெரிக்க இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் ஒருவர் கலந்து கொள்வது இதுதான் முதல்முறையாகும்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன், விர்ஜினியா மாநிலம், அஷ்பர்ன் நகரில் உள்ள ராஜ்தானி கோயிலில் நடந்த தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு தனது மருமகள் லாராவை அனுப்பிவைத்து பங்கேற்க வைத்தார். இவை அனைத்தும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஆதரவையும், வாக்குவங்கியை பெறும் நோக்கில் டிரம்ப் செய்யும் பிரசார யுத்தியின் ஒரு பகுதியாகும்.