அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மீது 15 பில்லியன் டாலர் மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளார். காரணம், புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக அவர் எடுத்துள்ள சட்ட நடவடிக்கையே. இந்த முறையில் அவர், அந்தப் பத்திரிகை மீது 15 பில்லியன் டாலர் மாண வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். நியூயார்க் டைம்ஸ் தற்போது அமெரிக்காவின் இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் குரலாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார். பல ஆண்டுகளாக அந்தப் பத்திரிகை தன்னைக் குறிவைத்து பொய்யான பிரச்சாரங்களைத் தொடர்ந்து செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
அந்த ஊடகம் தனக்கு எதிராக திட்டமிட்டு தவறான செய்திகளையும், பொய்க் கதைகளையும் வெளியிட்டதாகவும், இதனால் தனது நற்பெயர் பாதிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். “இது இனி சகிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” என்று அவர் பதிவு செய்துள்ளார்.
மேலும், நியூயார்க் டைம்ஸ் அமெரிக்காவின் மிக மோசமான பத்திரிகைகளில் ஒன்றாகிவிட்டதாக கடுமையாக விமர்சித்தார். தவறான செய்திகளை இனி பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்றும், தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் தயார் நிலையில் இருப்பேன் என்றும் அவர் சவால் விட்டுள்ளார்.
இது டிரம்ப் ஊடகங்களை குறிவைக்கும் முதல் சம்பவமல்ல. அதிபர் பதவியில் இருந்த காலத்திலும், பலமுறை அமெரிக்க ஊடகங்களை “போலி செய்திகள்” என்றே அவர் தாக்கியிருந்தார். அப்போதெல்லாம் கூட அவரது கருத்துகள் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியிருந்தன.
ஆனால் இந்த முறை மிகப் பெரிய அளவுக்குச் சென்றுள்ளது. காரணம், நேரடியாக 15 பில்லியன் டாலர் என்ற மிகப் பெரிய தொகையை மானநஷ்டமாக கோரப்போவதாக அவர் எச்சரித்திருப்பதே. இதனால் அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக உலகில் பெரும் அதிர்வலை கிளம்பியுள்ளது.
டிரம்பின் ஆதரவாளர்கள், "இது முற்றிலும் நியாயமான நடவடிக்கை" என வலியுறுத்துகின்றனர். ஊடகங்கள் பொய் செய்திகளை பரப்பினால், சட்டத்தின் மூலம் அதைச் சீர்செய்யும் உரிமை எவருக்கும் உண்டு என்பதே அவர்களின் வாதம். ஆனால், டிரம்பின் எதிர்ப்பாளர்கள் வேறு கோணத்தில் பார்க்கின்றனர்.
“இது வெறும் அரசியல் தந்திரம். தலைப்புச் செய்திகளில் இருப்பதற்காகவே அவர் மீது இதுபோன்ற வழக்கு மிரட்டலை விடுத்துள்ளார்” என்று அவர்கள் கூறுகின்றனர். எப்படியிருந்தாலும், டிரம்பின் இந்த புதிய நடவடிக்கை அமெரிக்க ஊடகம்-அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
