பாம் பீச் விமான நிலையத்தில் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' அருகே சந்தேகத்திற்கிடமான மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதால், அதிபர் டொனால்டு டிரம்ப் உயர் பாதுகாப்பு நடவடிக்கையாக சிறிய படிக்கட்டுகளைப் பயன்படுத்தி விமானத்தில் ஏறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் சிறிய அளவிலான படிக்கட்டுகளைப் பயன்படுத்தி 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' (Air Force One) விமானத்தில் ஏறினார். வழக்கமான படிகளைப் பயன்படுதுதவதற்குப் பதிலாக இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
விமானத்தில் அதிபர் ஏறும் பகுதியை நோக்கி இருக்கும் ஒரு சந்தேகத்திற்கிடமான மறைவிடத்தை (Sniper’s Nest) ரகசிய சேவை அதிகாரிகள் (Secret Service) கண்டுபிடித்ததை அடுத்து இந்த உயர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான மறைவிடம்
இது குறித்துப் பேசிய எஃப்.பி.ஐ இயக்குனர் காஷ் படேல், "அதிபர் வெஸ்ட் பாம் பீச்சுக்குத் திரும்புவதற்கு முன்பு, ஏர் ஃபோர்ஸ் ஒன் தரையிறங்கும் தளத்தைக் காணக்கூடிய தூரத்தில், உயரமான மேடை போன்ற ஒரு அமைப்பை ரகசிய சேவை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்," என்று தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் எந்த நபரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், புலன் விசாரணைக்காக எஃப்.பி.ஐ (FBI) பொறுப்பேற்று, ஆதாரங்களைச் சேகரிக்கும் குழுக்களையும், மேம்பட்ட கண்காணிப்புத் திறன்களையும் பணியில் அமர்த்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். அந்த இடத்தில் வெடிமருந்தோ அல்லது வேறு ஆபத்தான பொருட்களோ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்த அமைப்பின் இருப்பு விமான நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உடனடியாக மறுஆய்வு செய்யத் தூண்டியுள்ளது.
விமானத்தின் இடம் மாற்றம்
இந்த மரத்தாலான அமைப்பு, 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானம் சமீபத்தில் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் 200 கெஜம் (சுமார் 180 மீட்டர்) தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த இடத்தில் விமானம் நிறுத்தப்படுவதில்லை என்றும், ஆனால் கட்டுமானப் பணிகள் காரணமாகத் தனி விமானங்களுக்கான பகுதிக்கு அருகே விமானம் நிறுத்தப்பட்டதால், இந்த மறைவிடத்தின் பார்வைக்கு அது உட்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த அமைப்பை உருவாக்கியவர்கள் அல்லது அதைப் பயன்படுத்தியவர்கள் குறித்தும், இது சமீபத்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையதா என்றும் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று காஷ் படேல் தெரிவித்தார். இதுவரை இந்த அமைப்புடன் தொடர்புடைய யாரும் கைது செய்யப்படவில்லை.
பாதுகாப்புக்காக சிறிய படிக்கட்டுகள்
பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக, அதிபர் டிரம்ப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெரிய படிக்கட்டுகளுக்குப் பதிலாக, விமானத்தின் பின்புறத்தில் உள்ள சிறிய படிக்கட்டுகள் வழியாக விமானத்தில் ஏறினார். அதிக அச்சுறுத்தல் உள்ள அல்லது வெளிப்பாடு குறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலைகளில் மட்டுமே இந்த முறை பொதுவாகப் பயன்படுத்தப்படும். அதிபர் விமானத்தில் ஏறும் போது வெளிப்பாட்டைக் குறைக்க ரகசிய சேவை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
முன்னதாக, 2024 ஜூலையில் பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திலும், செப்டம்பர் 15 அன்று வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள அவரது கோல்ஃப் மைதானத்திற்கு அருகிலும் டிரம்ப் மீது இரண்டு முறை கொலை முயற்சிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இப்போது இந்த புதிய அச்சுறுத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
