இதுவரை எட்டு போர்களைத் நிறுத்திவிட்டதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இப்போது மற்றொரு போர் ஏற்படுவதைத் தடுப்பதை முயற்சிக்கிறார்.  ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலை தடுப்பது எனக்கு மிகவும் எளிதான விஷயம் என்கிறார்.

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்போது லைம் லைட்டுக்கு வந்துள்ளார்.

இதுவரை எட்டு போர்களைத் நிறுத்திவிட்டதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இப்போது மற்றொரு போர் ஏற்படுவதைத் தடுப்பதில் வெற்றி பெற முயற்சிக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலை தடுப்பது எனக்கு மிகவும் எளிதான விஷயம்’’ என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் டிரம்பின் இந்தப்பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று இரவு பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதாக மே மாதம் அவர் கூறியதைக் குறிப்பிட்டு, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை குறித்து டிரம்ப், "பாகிஸ்தான் தாக்கியுள்ளது அல்லது தாக்குதல் நடந்து வருகிறது என்பது எனக்குத் தெரியும். நான் அதைத் தீர்க்க வேண்டும் என்றால், அது எனக்கு எளிதாக இருக்கும்" என்றார்.

இதன் மூலம், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்தது உட்பட பல போர்களைத் தீர்த்து வைத்ததாக டிரம்ப் மீண்டும் ஒருமுறை தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தினார். ஆனாலும், ட்ரம்பின் இந்தப்பேச்சை இந்தியா பலமுறை நிராகரித்துள்ளது. டிரம்ப் பல போர்களைத் தீர்த்து வைத்ததாகவும், ஆனால் அவர் ஒருபோதும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறவில்லை என்றும் கூறினார்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவைப் பற்றி டிரம்ப் குறிப்பிடுகையில், "வேறொருவர் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். மிகவும் நல்ல பெண்மணி. அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதில் மட்டுமே எனக்கு அக்கறை உள்ளது" எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த கடுமையான சண்டையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இருப்பினும், நேற்று இரவு தாமதமாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

மூத்த தலிபான் அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி பாக்டிகா மாகாணத்தில் மூன்று இடங்களில் குண்டுவீச்சு நடத்தியதாகவும் கூறினார். ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல்களில் மூன்று உள்ளூர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் கொல்லப்பட்டனர். வீரர்கள் பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒரு கோழைத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், ஆப்கானிஸ்தான் அரசு 25 பாகிஸ்தான் இராணுவ நிலைகளைக் கைப்பற்றியதாகக் கூறியது. இதில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர். கடந்த வாரம் தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி இந்தியாவிற்கு வருகை தந்திருந்தபோது காபூலில் உள்ள அப்துல் ஹக் சதுக்கத்தில் குண்டுவெடிப்புடன் பதட்டங்கள் தொடங்கின. குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஆனாலும், பாகிஸ்தான் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தது.