கொரோனா வைரசுக்கு எதிராக அவசர தேவைக்கு பைசர் தடுப்பு மருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இது ஒட்டு மொத்த உலக நாடுகளையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வூபே மகாணம், வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 180-க்கும் அதிகமான நாடுகளை பாதித்துள்ளது. அதில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளன. வைரஸ் பாதித்த நாடுகளில் பட்டியலில் முதல் ஆறு இடங்களை இந்நாடுகள் பெற்றுள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. இதுவரை அங்கு 2 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 லட்சத்து 50  ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனாவால் ஒட்டுமொத்த உலகமும் பெரும் துயரை சந்தித்து வரும் நிலையில், இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசி ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக வீரியமிக்கதாக செயல்படும் வகையில் தயாராகி உள்ளது. தற்போது அவைகள் ஒன்றன்பின் ஒன்றாக மக்கள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன.  இவற்றின் ஒருபகுதியாக பைசர், பாரத் பயோஎன்டெக் உள்ளிட்ட  நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் பல கட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அவை தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் தடுப்பூசி வெற்றி பெறும் நிலையில், டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு முதற்கட்ட தடுப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு  தங்களது நாட்டு மக்களுக்கு பயன்படுத்த பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவும் இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால் உலகம் முழுதும் உள்ள பல்வேறு நாடுகள் உடனடியாக இத்தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கும் என்றும், நாட்டில் தேவையான பகுதிகளுக்கு அவற்றை வினியோகித்து கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற சூழலும் உருவாகியுள்ளது.