திருக்குறள் உலகின் தொன்மை வாய்ந்த நூலாகும். 1330 குறள்கள் கொண்ட இந்த நூல் . இந்த நூல்தான் உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதனால்தான் திருக்குறள் உலகப்பொதுமறை என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் தமிழர்கள் ஆட்சி புரிந்துள்ளதாக பல ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்வதற்காக கம்போடியாவின் கலாசார மற்றும் பண்பாட்டு துறை இயக்குநர் மார்ன் சொப்ஹீப் தமிழகத்திற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, 6ம் நூற்றாண்டு காலத்தில் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த பல்லவ அரசை ஆண்ட மகேந்திர வர்மன் தான் தற்போதைய கம்போடியாவின் கேமர் பேரரசை ஆட்சி புரிந்துள்ளார் என்பதை மாமல்லபுரத்தில் உள்ள கற்கால சிற்பங்களின் வாயிலாக அறிந்து கொண்டோம் என தெரிவித்தார்.மேலும், காஞ்சிபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்கால பெருமைவாய்ந்த வழிபாட்டு தலங்களை ஆய்வு செய்தபோதுதான் கேமர் பேரரசுக்கும், பல்லவ பேரரசுக்கும் தொடர்புள்ளதை அறிந்தோம் என மார்ன் சொப்ஹீப் கூறினார்.

கம்போடியாவின் கேமர் பேரரசுக்கு ஆதரவாக இருந்த ராஜேந்திர சோழனை பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு தங்கள் நாட்டில் சிலை வைக்கவுள்ளோம் என்றும், இதற்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலக தமிழர்கள் பங்குபெற இருக்கிறார்கள் என கூறினார்.

மேலும், உலக பொதுமறையான திருக்குறளை கேமர் மொழியில் மொழிப்பெயர்த்து கம்போடிய நாட்டு பள்ளி பாட நூல்களில் சேர்க்கப்படும் என்றும் மார்ன் அறிவித்துள்ளார்.