பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதத்தின் கோட்டையாக  இருப்பதை உலகம் நன்கு அறிந்துள்ளது என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.  ஜம்மு-காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல் இந்தியாவுக்கு எதிராக அந்நாடு செய்துவரும் பிரச்சாரம் உலகின் கவனத்தை திசை திருப்புவதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சி எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது செல்லாது என இந்தியா அறிவிக்க வேண்டும் எனவும்,  சிறப்பு அந்தஸ்து நீக்கம் காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனவும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பிரச்சாரம் செய்து வருகிறது. 

அதே நேரத்தில் சர்வதேச நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் அது கோரிவருகிறது, மேலும் சீனாவின் உதவியுடன் காஷ்மீர் விவகாரத்தை ஐநா மன்றம் வரை கொண்டு சென்று அதை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சித்து பாகிஸ்தானும், சீனாவும் ஒருசேரத் தோல்வி அடைந்துள்ளன.அதேநேரத்தில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் காஷ்மீர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பிரச்சனை என்பதால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஒதுங்கிக் கொண்டன. இதனால் இந்தியா மீது ஆத்திரத்தின் உச்சியில் உள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சி  வலைகளை பின்னி வருகிறது. ஒருபுறம் தங்கள் நாட்டு தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவ செய்வதுடன், மறுபுறம் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை தனது எல்லைக்குள் இணைத்து, புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டு, இந்தியாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதியான டி.எஸ் திருமூர்த்தி இந்தியா மீது பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாதிகளின் கோட்டையாக உள்ளது, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இன்னும் அங்கே செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீர் சர்வதேசப் பிரச்சினை அல்ல, அது இரு நாடுகளுக்கும் இடையேயான விவகாரம். அதை உரையாடலால் மட்டுமே தீர்க்க முடியும்.  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதத்தின் கோட்டையாக இருப்பதை உலகமே அறிந்திருக்கிறது. உலகின் அனைத்து முக்கிய பயங்கரவாதிகளும்  பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளனர். பல பயங்கரவாத அமைப்புகள் இன்னும் அச்சமின்றி அங்கு செயல்படுகின்றன. உலகுக்கு எதிராக செயல்திட்டங்கள் அங்க தீட்டப்படுகின்றன. ஜமாத்- உத்-தாவா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இவை தவிர பல பயங்கரவாத அமைப்புகளும் அங்கு செயல் படு கின்  றன.

அப்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் குறித்து ஐ.நா மன்றத்திற்கு தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் இந்த பயங்கரவாத அமைப்புகளை கண்காணிப்பது மற்றும் அவர்களுக்கு வரும் நிதி உதவிகளை நிறுத்துவது குறித்தும் பேசப்பட்டது. அவ்வப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா அச்சுறுத்தல்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. இப்படி பாகிஸ்தானின் பெயர் எல்லாவற்றிலும் அடிபடுகிறது என்றார். 

அதேநேரத்தில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் விவாதத்திற்கு பதிலளித்த அவர், நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், ஐநா மன்றத்தில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நேரத்தை வீணடிக்கிறது. இந்தியாவுக்கு எதிராக அது மேற்கொண்டுவரும் ஒவ்வொரு முயற்சியும் வீண். இந்தியா அதன் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி முறியடித்து வருகிறது, ஐநாவில் உண்மை என்பதை நிரூபிக்கும் குரல் பாகிஸ்தானுக்கு இல்லை, பாகிஸ்தான் என்ன செய்து கொண்டிருக்கிறது அங்கு என்ன நடக்கிறது என்பது உலகத்துக்கே தெரியும் என அவர் விமர்சித்துள்ளார்.