பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் இந்த மாதம் இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவரின் பயணத்தை பிரிட்டிஷ் தூதரகம் உறுதிசெய்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் இந்திய குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  ஆண்டுதோறும் வெளிநாட்டு  தலைவர்கள் தலைமை விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

ஏற்கனவே இதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்திருந்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப், இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமரை தலைமை விருந்தினராக கலந்து கொள்ளுமாறு இந்திய  பிரதமர் விடுத்த அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்  ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். இந்நிலையில்  உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அறிவித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். 

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில்,  கொரோனா வைரஸை தடுக்க நாடு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் பிரதமர் போரிஸ் ஜான்சனை குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும்படி இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. நிச்சயம் அவர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவரின் இந்திய வருகையின்போது இருநாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, சுகாதாரம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு  விவகாரங்கள் குறித்து அவர் விவாதிப்பார். 2021 ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளுக்கு அப்போது முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

போரிஸ் ஜான்சன்  இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர். அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது இருக்கும். இதன் மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் குடியரசு தினத்தன்று இந்தியாவின் கௌரவ விருந்தினராக பங்கேற்கும் இரண்டாவது பிரிட்டிஷ் தலைவராக போரிஸ் ஜான்சன் கருதப்படுவார். இதற்கு முன்னர் 1993-ஆம் ஆண்டு முன்னாள் பிரிட்டிஸ் பிரதமர் ஜான் மேஜர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.