அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனாவில் இருந்து நாட்டை பாதுகாக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதிலிருந்து முற்றிலும் அவர் தவறிவிட்டார் என முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மீண்டும் அதிபரானால் அவர் மக்களை இவ்வாறு பாதுகாப்பார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் -3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் களம்  இறங்கியுள்ளார். தற்போது இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அமெரிக்க தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் பிடனின் ஆதரவாளர்கள் இருவருக்கும் வாக்கு சேகரிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் சார்பில் பிடனுக்கு ஆதரவாக ஒபாமா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிலடெல்பியாவில் புதன்கிழமை இரவு நடந்த பேரணியில் முன்னாள் அதிபர் ஒபாமா பிடனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.  அப்போது பேசிய அவர்: 

அமெரிக்காவில்ர கொரோனா வைரஸை தடுக்க எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் ட்ரம்ப் எடுக்கவில்லை. கொரோனா வைரசை பெரிதாகவே கருதவில்லை அப்படி இருக்கையில் அவர் மீண்டும் அதிபரானால் அமெரிக்கர்களை எவ்வாறு பாதுகாப்பார். கடந்த 8 மாதங்களாக தொற்றுநோய் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடுகிறது, நோய் பரவி எட்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை அதை தடுத்து நிறுத்த முடியாமல் ட்ரம்ப் போராடிக் கொண்டிருக்கிறார். அது ஒரு புறமிருக்க, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் அதிபராகி அவர்  நம்மை காப்பாற்றுவார் என்று நாம் எதிர்பார்க்க கூடாது. நோய்த்தொற்று ஏற்படுவதில் இருந்து நாட்டை அவரால் பாதுகாக்க முடியவில்லை. இது டிவி ரியாலிட்டி ஷோ அல்ல.  மக்கள் தங்கள் பொறுப்புகளின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அதே நேரத்தில் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸை பாருங்கள். அவர்கள் தேவையில்லாமல் பேசுவதில்லை,  அதேநேரத்தில் ஜனாதிபதி ட்ரம்பை பாருங்கள் அவர் தொடர்ந்து தனது ட்விட்டர் மூலம் சதி திட்டங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறார். 

ஒசாமா பின்லேடன் உண்மையிலேயே அமெரிக்க  கடற் படை கமாண்டோக்களால் கொல்லப்படவில்லை என்று கூறிவருகிறார். அவரிடம் நாட்டை பிளவுபடுத்தும் சதி உள்ளது. இது எதிர்கால சந்ததியினர் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஒபாமா. கொரோனா விவகாரத்தில் சீனாவை கடுமையாக எதிர்ப்பதாக கூறும் ட்ரம்ப், சீனாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்.? என கேள்வி எழுப்பினார். இது குறித்து கடந்த புதன்கிழமை வெளியான நியூயார்க் டைம்ஸ்  செய்தியை வெளியிட்ட ஒபாமா சீனாவில் உள்ள ஒரு  வங்கியில் கணக்கு வைத்திருப்பதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடதக்கது.