மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - சம்பவ இடத்திலேயே 36 பேர் உயிரிழந்த பரிதாபம்..!
பெரு நாட்டின் மலைச்சரிவில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டின் தலைநகரான லீமா அருகே பசமாயோ என்னும் நகரம் அமைந்துள்ளது. கடற்கரை நகரமாக உள்ள இப்பகுதிக்கு செல்லும் சாலைகள் கடற்கரையையொட்டிய மலைப்பாதைகளாக அமைந்துள்ளன. இந்த சாலைகளை ஒட்டி சுமார் 100 அடிக்கு ஆழமான பள்ளங்கள் உள்ளன.
இந்நிலையில் பசமாயோ நகரில் இருந்து 57 பயணிகளுடன் லீமா நகரை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
ஆபத்தான வளைவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மினி லாரியில் நேருக்கு நேர் மோதியது. இதில் அருகில் இருந்த 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் ஹெலிகாப்டரில் மீட்பு பணிகள் நடைபெற்றது. மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.