சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானில் மீண்டும் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது.

சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, ஜப்பானில் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் 6.7 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

முன்னதாக, திங்களன்று ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் வடக்கு ஜப்பானின் ஹோன்ஷூ தீவில் உள்ள அமோரி கடற்கரைப் பகுதியில் குறைந்தது 34 பேர் காயமடைந்தனர். மேலும், பசிபிக் கடலோர சமூகங்களில் சுனாமி அலைகளும், லேசான சேதங்களும் பதிவாகியிருந்தன.

சுனாமி எச்சரிக்கை

இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. வடக்கு பசிபிக் கடற்கரைத் பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும், சிறிது நேரத்திலேயே, ஜப்பானின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

ஜப்பான் பூகம்பங்கள்

ஜப்பான் ஆண்டுக்கு சுமார் 1,500 நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது. ஜப்பான் பசிபிக் பிராந்தியத்தில் பல டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் 'நெருப்பு வளையத்தில்' (Ring of Fire) அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி எரிமலைகளும் நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.

பெரும்பாலான நிலநடுக்கங்களால் பெரிய சேதம் ஏற்படுவதில்லை என்றாலும், சில நிலநடுக்கங்கள் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக, 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தி, வடகிழக்கு கடற்கரையில் 18,000-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்தது.

ஒவ்வொரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகும், ஜப்பான் முக்கியமான படிப்பினைகளைக் கற்றுக்கொண்டுள்ளது. நிலநடுக்கங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க, அதன் பொறியியல் மற்றும் கட்டுமான அணுகுமுறைகளைத் தொடர்ந்து மாற்றியமைத்து மேம்படுத்தி வருகிறது.