ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, வானில் மர்மமான நீல நிற ஒளி தோன்றியது, இது 'நிலநடுக்க ஒளி' (EQL) என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்கான காரணம் குறித்து விஞ்ஞானிகளிடையே விவாதம் நிலவுகிறது.
ஜப்பானில் கடந்த புதன்கிழமை 7.6 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியபோது, வானில் தோன்றிய நீல நிற ஒளிக்கீற்று தோன்றியது. ஆமோரி மாகாணத்தின் கிராமப்புற மக்கள் இந்த மர்மான நீல ஒளிக்கூற்றைக் கண்டுள்ளனர். இந்த அரிய இயற்கை நிகழ்வு 'நிலநடுக்க ஒளி' (Earthquake Lights - EQL) குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.
அங்குள்ள மக்கள் தங்கள் மொபைல் போன் கேமராக்களில் பதிவு செய்துள்ள இந்த ஒளி, சில வினாடிகளுக்கு பிரகாசமாகத் தெரிந்தது.
அறிவியலாளர்கள் விளக்கம்
இந்த மர்மமான ஒளிக்கூற்றுகள், நில அதிர்வு அழுத்தத்தின் விளைவாக புவியின் மேலோட்டில் மின்சார சக்திகள் உருவாகி, அவை மேலே உள்ள காற்றை அயனியாக்கம் செய்வதால் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS), நிலநடுக்க ஒளி வலுவான நிலநடுக்கம் தாக்கும்போதோ அல்லது அதற்கு முன்போ தோன்றுகிறது என்று கூறுகிறது. எனினும், இந்த நிகழ்வுக்கு உறுதியான அறிவியல் விளக்கம் இன்னும் இல்லை என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.
நிபுணர்களின் கருத்து வேறுபாடு
நிலநடுக்க ஒளிகள் உண்மையானதா அல்லது வெறும் தற்செயல் நிகழ்வா என்பதில் புவி இயற்பியலாளர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. சில நிபுணர்கள், இத்தகைய ஒளிக்கூற்றுகள் நில அதிர்வு செயல்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்புடையவை அல்ல என்று தெரிவிக்கின்றனர்.
மாறாக, நிலநடுக்கத்தின் போது மின் கம்பிகள் வெடிப்பது அல்லது மின்மாற்றிகள் செயலிழப்பினால் ஏற்படும் ஒளியாகவும் இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சில காட்சிகள் உண்மையான நிலநடுக்க ஒளியுடன் ஒத்துப்போகின்றன என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர்.
ஆய்வுத் தகவல்கள்
3.6 முதல் 9.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கங்களின்போது தோன்றிய 65 நிலநடுக்க ஒளி நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்து 2014-இல் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 5.0 ரிக்டர் அளவை விட அதிகமான நிலநடுக்கங்களின் போது நிலநடுக்க ஒளி தோன்றுவதை இந்த ஆய்வு கண்டறிந்தது. மேலும், இத்தகைய நிகழ்வுகள் பெரும்பாலும் கண்டப் பிளவு மண்டலங்களில் ஏற்பட்டுள்ளன என்று கூறுகிறது.
நிலநடுக்கங்கள் நிகழ்வதற்கு முன்னரோ அல்லது நிலநடுக்கம் ஏற்படும்போதோ தான் இந்த ஒளிகள் காணப்படுகின்றன என்றும், நிலநடுக்கத்துக்குப் பிறகு தோன்றுவதில்லை என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.


