துர்க்மெனிஸ்தானில் நடந்த சர்வதேச மன்றத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நீண்ட நேரம் காத்திருந்தார். பொறுமையிழந்து புடின் இருந்த அறைக்குள் அவர் நுழைந்த சம்பவம், சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது.
துர்க்மெனிஸ்தான் ஐ.நா.வின் அங்கீகாரத்தைப் பெற்ற 30-ஆவது ஆண்டு நிறைவை நட்பு நாடுகளுடன் இணைந்து கொண்டாடியது. அந்த நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்திக்க நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
40 நிமிட காத்திருப்பு
டிசம்பர் 12 அன்று துர்க்மெனிஸ்தானில் நடைபெற்ற இந்த சர்வதேச மன்றத்தில், ரஷ்ய அதிபர் புடினைச் சந்திப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் காத்திருந்தார்.
ஷெரீஃப் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இருவரும் அருகிலுள்ள அறையில் சுமார் 40 நிமிடங்கள் காத்திருந்தனர்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பொறுமையிழந்த ஷெரீஃப், புடின் துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்தார்.
ஷெபாஸ் ஷெரீப் திடீரென உள்ளே நுழைந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஷெரீஃப் சுமார் 10 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் கேலி
மூடிய அறைக்குள் அவர் நுழைந்த இந்தச் செயல், இராஜதந்திர ரீதியிலான தவறு (Diplomatic Misstep) என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
எக்ஸ் தளத்தில் ஒரு பயனர், "புடின் பிச்சைக்காரர்களுக்காக தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை," என்று கருத்து தெரிவித்திருக்கிறார். மற்றொரு பயனர், "டிரம்ப் கூட இந்த பிச்சைக்காரர்களிடம் இதையே செய்தார்," என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
துர்க்மெனிஸ்தானின் நடுநிலைமை
துர்க்மெனிஸ்தானின் நடுநிலைமை கொள்கைக்கு ஐ.நா. அங்கீகாரம் கிடைத்ததன் 30வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த சர்வதேச மன்றம் நடைபெற்றது. இந்த நடுநிலைமைக் கொள்கையின்படி, துர்க்மெனிஸ்தான் இராணுவக் கூட்டணிகளில் இருந்து விலகி இருக்கவும், தற்காப்பு தவிர வேறு எந்த மோதலிலும் ஈடுபடாமல் இருக்கவும் உறுதியேற்றுள்ளது. வெளிநாட்டு இராணுவத் தளங்கள் தங்கள் மண்ணில் அனுமதிப்பதில்லை என்பது இந்தக் கொள்கையில் முக்கிய அங்கமாக உள்ளது.


