பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானின் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பல ஆண்டுகளாக கீரியும், பாம்புமாக இருந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானை ஆளும் தலீபான்கள் 'தெஹ்ரீக் இ தலிபான்' என்ற அமைப்பை வளர்த்து விட்டு தங்கள் நாட்டு மீது தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு 'தெஹ்ரீக் இ தலிபான்' அமைப்பினரை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தானின் காபூலில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியிருந்தது.
பாகிஸ்தான் மீது ஆப்கான் தாக்குதல்
இதனால் கடும் கோபம் அடைந்த தலீபான்கள் பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்திருந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்களது மண்ணில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டி நேற்று இரவு ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது, எல்லையில் ஆயுதமேந்திய பதிலடி தாக்குதல்களைத் தொடுத்தன என்று பல மாகாணங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கை
காபூல் மீது பாகிஸ்தான் இராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக தலிபான் படைகள் எல்லையில் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகக் கடுமையான மோதல்களில் ஈடுபட்டுள்ளன என்று ஆப்கானிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லையில் அமைந்துள்ள குனார், நங்கர்ஹார், பக்தி, கோஸ்ட் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்களைச் சேர்ந்த தலிபான் அதிகாரிகள் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார்கள்.
12 பாகிஸ்தான் வீரர்கள் பலி
''நாங்கள் முதலில் இலகுரக பீரங்கிகளை கொன்டும் மற்றும் பின்னர் கனரக பீரங்கிகளை கொண்டும் பாகிஸ்தான் எல்லையில் 4 நிலைகளை தாக்கினோம். இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்துள்ளது'' என்று தலிபான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யட் கோவாராஸ்ம் தெரிவித்துள்ளார். ஆப்கான் படைகளின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுள்ளது. ஆப்கான் தாக்குதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
