ஆப்கானிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்ததாக பாகிஸ்தான் கூறியது பொய் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா ஆப்கானிஸ்தானைத் தாக்கியதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டை ஆதாரமற்றது என தாலிபான் அரசும் நிராகரித்துள்ளது.
இந்திய ஏவுகணை எதுவும் ஆப்கானிஸ்தான் மண்ணில் விழவில்லை என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியா ஆப்கானிஸ்தானைத் தாக்கியது என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபணமாகியுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் கூற்றை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.
இப்போது, பாகிஸ்தானின் கூற்றுக்குப் பதில் அளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இனாயத்துல்லா குவாரிஸ்மி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபான்கன் அரசும் பாகிஸ்தானை பொய் செல்வதை அம்பலப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கூற்று ஆதாரமற்றது என்று தாலிபான் அரசு கூறியுள்ளது. எந்த இந்திய ஏவுகணையும் ஆப்கானிஸ்தானின் எந்தப் பகுதியையும் தாக்கவில்லை என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இனாயத்துல்லா குவாரிஸ்மி கூறியிருக்கிறார்.
ஹுரியத் வானொலியில் பேசிய அவர், "ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது குறித்த பாகிஸ்தானின் கூற்றை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம். அத்தகைய கூற்றுக்களில் எந்த உண்மையும் இல்லை" என்றார்.
பாகிஸ்தானின் சொன்னது என்ன?
ஆப்கானிஸ்தானை சீர்குலைக்கும் நோக்கில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது. இந்திய ஏவுகணை ஆப்கானிஸ்தானில் விழுந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக பாகிஸ்தான் விமானப்படை கூறியது. பாகிஸ்தானின் உயர்மட்ட அரசியல்வாதிகள், நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களும் இந்த வதந்தியைப் பரப்பியுள்ளனர்.
பாகிஸ்தானின் இந்தக் கூற்றுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. அதன் அறிக்கையில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அவர்களின் உண்மையான எதிரிகள் யார் என்பது நன்றாகத் தெரியும் என்று கூறியது. பாகிஸ்தானின் கூற்று முற்றிலும் தவறானது மற்றும் அபத்தமானது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதல்:
சமீப காலமாக ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தானின் உறவுகள் நன்றாக இல்லை. அதே நேரத்தில், இந்தியாவுடனான தாலிபன் அரசின் உறவுகள் மேம்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் தனக்கு எதிராக மற்றொரு போர்முனை உருவாகக்கூடும் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது.
இதைத் தவிர்க்க, பாகிஸ்தான் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான சூழலை உருவாக்க முயல்கிறது. ஆனால் தாலிபன் அரசாங்கம் பாகிஸ்தான் பொய் சொல்கிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கட்டுக்கதைகள்:
மே 6ஆம் தேதி இரவு இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. ஒருபுறம், எல்லையில் துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மறுபுறம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பல வதந்திகளைப் பரப்பி வருகிறது. அந்த வகையில்தான் ஆப்கானிஸ்தானில் ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாகவும் கட்டுக்கதையை பரப்பியுள்ளது.


