உலகமே கொரோனா வைரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும்போது சீனாவுக்கு மிக நெருக்கத்தில் உள்ள தைவான் மட்டும் எப்படி இந்த வைரஸை எதிர்த்துப் போராடி வென்றது என்பது உலக வல்லரசு நாடுகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. தைவானின் தலைநகரம் தைபே ஆகும்,  இது சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து 950 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 453 பேர். நியூயார்க் வுஹானில் இருந்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, ஆனால் அங்கு கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.95 லட்சத்திற்கும் அதிகமாகும். இதுவரை அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. ஆனால் தைவானில் இதுவரை 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தைவானில் முழுஅடைப்பு செய்யப்படவில்லை.  பள்ளி, கல்லூரி மற்றும் பொது நிகழ்ச்சிகள் மட்டுமே தடை செய்யப்பட்டன. அதுவும் கொஞ்சகாலம் மட்டும்தான். அப்படியெனில் தைவானில் எப்படி கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது என்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். 

இந்த வைரஸை வெகுவாக  கட்டுப்படுத்தியதில் அந்நாட்டின் பெண் ஜனாதிபதி சாய் இங்-வென்னுக்கு அதிகபங்குண்டு, 2020 ஜனவரியில், ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக வென்ற சாய், அதிரடியான முடிவுகளை எடுத்து கொரோனா  தொற்றை வென்றுள்ளார் என்றால் மிகையாகாது. WHO-வின் கூற்றுப்படி முதல் கொரோனா வைரஸ் நோயாளி டிசம்பர் 8 அன்று வுஹானில் கண்டுபிடிக்கப்பட்டார், இருப்பினும் அது கொரோனா வைரஸ் என்று அப்போது அறியப்படவில்லை. அது அப்போது வெறும் நிமோனியாவாக மட்டுமே அடையாளம் காணப்பட்டது. டிசம்பர் பிற்பகுதியில் வுஹானில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டர் லி வென்லியாங் கொரோனா வைரஸ் குறித்து  எச்சரித்தார், ஆனால்,  சீன அரசாங்கம் லி யை புறக்கணித்ததுடன்,  வதந்திகளை பரப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டியது. பின்னர் லி கொரோனாவால் உயிரிழந்தார். அந்த வைரஸ் வுஹான் நகரம் முழுக்க தீவிரமடையத் தொடங்கியதையடுத்து லி உயிருடன் இருக்கும்போது எச்சரித்த வாசகங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. அதைத் தொடர்ந்து  டிசம்பர் 31 மாலை, உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது தைவான்  நோய் கட்டுப்பாட்டு மையம் புதிய நோய் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டது.

சீனாவில் டிசம்பர்-31 அன்று 27 விமானங்கள் திடீரென நிறுத்தப்பட்டன, அதன்பிறகு சீனாவில் இருந்து வரும் ஒவ்வொரு நபரையும் பரிசோதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தைவான் அரசாங்கம் அதிரடியாக உத்தரவிட்டது. அடுத்த 15 நாட்களில் வுஹானிலிருந்து  திரும்பிய அனைவரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தது . அதில் கொரோனா முதல் நோயாளி ஜனவரி 21 அன்று தைவானில் கண்டுபிடிக்கப்பட்டார், இதற்குப் பிறகுதான் அங்குள்ள அரசாங்கம் வுஹானுக்கு செல்லும் மக்களுக்கு பயண ஆலோசனைகளை வழங்கியதுடன்,  வுஹானிலிருந்து திரும்பியவர்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது. அதைத்தொடர்ந்து ஜனவரி 26 அன்று சீனாவில் இருந்து வரும் அனைத்து வகையான விமானங்களையும் தைவான் அரசு தடை செய்ததுடன், சீனாவில் இருந்து நாடு திரும்பிய ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். நாடு திரும்பும் அனைவரும் செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தைவான். ஜனவரி 24 அன்று இந்த காய்ச்சலுக்கு முகக்கவசங்கள் தேவை என உணர்ந்த தைவான் முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. அந்தத் தடை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

அப்போது  சீனாவில் வேகமாக பரவியிருந்த கொரோனா வைரஸ் காரணமாக, முகக்கவசங்கள் வாங்க மக்களிடையே போட்டி நிலவியது, ஆனால் தைவான் அதை முன்கூட்டியே உணர்ந்து தேவையான முகமூடிகளை தக்கவைத்துக்கொண்டதால் முகக்கவசங்களுக்கான நெருக்கடி தவிர்க்கப்பட்டது. பிப்ரவரி-3ஆம் தேதி வாக்கில் தைவானில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தைவான் அரசு வழங்கியிருந்த தேசிய சுகாதார காப்பீட்டு அட்டை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அட்டை இல்லாதவர்களுக்கும் உடனே மருத்துவ அட்டைகள் வழங்கியதுடன், மக்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. தைவான், நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முகக்கவசம் வழங்கியதுடன், நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளைக் கொண்டு முகக்கவச உற்பத்தியை அதிகப்படுத்தியது. அரசு எச்சரிக்கையையும் மீறி முகக்கவசம் அணியாதவர்களுக்கு 38 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தத்தில் தைவானில் எந்தவிதமான முழுஅடைப்புமில்லை, பொது போக்குவரத்து அங்கு தொடர்ந்தது,  மார்ச்-31 அன்று போக்குவரத்து துறை அமைச்சர் லின் சியா-லுங்  ரயில்களில், பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கினார். 

முகமூடி அணியாமல் பஸ், ரயிலில் பயணிக்க முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் 15,000 தைவான் டாலர்கள் அதாவது சுமார் 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஏப்ரல் மூன்றாம் தேதி அரசாங்கம் தெளிவுபடுத்தியது. பிப்ரவரியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் தைவான் அரசு ஆல்கஹால் உற்பத்தியை 75% அதிகரிக்குமாறு புகையிலை மற்றும் மதுபான கழகம் மற்றும் தைவான் சர்க்கரை கழகத்திற்கு உத்தரவிட்டது. சனிடைசருக்கு மாற்றாக அதை பயன்படுத்தியது தைவான். அதேபோல் மார்ச் மாதத்தில் டிஜிட்டல் தெர்மோமீட்டர்களை ஏற்றுமதி செய்வதையும் அரசாங்கம் தடைசெய்தது.  ஜனாதிபதி சாய் இங்-வென் தைவானிய நிறுவனங்கள் பிபிஇ கருவிகளை பெருமளவில் உற்பத்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதனால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும் நிறுத்தப்பட்டது.  இதுமட்டுமல்லாமல் மே-1 முதல் கை சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினிகள் ஏற்றுமதி செய்வதை அரசாங்கம் தடை செய்தது, இதனுடன் தைவான் அரசாங்கம் அதிரடியாக எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகள் மக்கள் கொடுத்த சிறப்பான ஆதரவுடன், சீனாவுக்கு மிக நெருக்கத்தில் இருந்த போதிலும், வெறும் 450 க்கும் குறைவான தொற்று நோயாளிகளுடனும் வெறும் பத்துக்கும் குறைவான உயிரிழப்புகளுடனும் தைவான் கொரோனா என்ற கொடிய அரக்கணை வென்று இன்று உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக உள்ளது. 

கொரோனாவை கையாண்டதற்காக தைவானை கனடா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் பாராட்டியுள்ளது, டைம் பத்திரிகையின் ஒரு கட்டுரை மூலம் முன்னாள் டேனிஷ் பிரதமர் ஆண்டர்ஸ் ஃபோக் தைவானின் பணிகளைப் பாராட்டினார்.ஜெர்மனியின் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவரான சாண்ட்ரா பாபெண்டோர்ஃபர்-லிச்சும் தைவானின் பணி அருமை என்று விவரித்தார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆகியோர் கொரோனாவை எதிர்த்துப் போராட தைவானின் மாதிரியை தங்கள் அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். உலக சுகாதார நிறுவனம் தைவானை உலக நாடுகளுக்கு வழி காட்ட அழைத்துள்ளது குறிப்பிடதக்கது.