ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரின் மையப்பகுதியில் உள்ள சுற்றுலா தளம் ஒன்றில் மக்கள் நேற்று அதிக அளவில் கூடி இருந்தனர்.

இந்நிலையில் திடீரென மக்கள் கூட்டத்தில் வேன் ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். வேன் மோதியதில் 13 பேர் உடல் நசுங்கி இறந்தனர். 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. வாகன தாக்குதல் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், வேனை ஓட்டிவந்தவன் பிடிபடவில்லை. இந்த தாக்குதலை அடுத்து நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

இந்நிலையில், பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் யாரும் காயமடைந்துள்ளதாக எந்த தகவலும் வரவில்லை என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

மேலும், ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள சுஷ்மா சுவராஜ் அவசர உதவிக்காக ஸ்பெயினில் உள்ள இந்தியர்களை தொடர்பு கொள்ள +34-608769335 என்ற அவசர உதவி எண்களையும் அறிவித்துள்ளார்.