'டிட்வா' புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹3,700 கோடி) நிதியுதவியை அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொழும்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
'டிட்வா' (Ditwah) புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, 450 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹3,700 கோடி) மதிப்பிலான விரிவான நிதியுதவித் திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை கொழும்பில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
ஆபரேஷன் சாகர் பந்து
புயல் தாக்கிய உடனே, இந்தியா 'ஆபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) என்ற பெயரில் துரித கதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. இதன் மூலம் சுமார் 1,100 டன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 14.5 டன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர கால மருத்துவ சேவைகளை வழங்க இந்தியக் குழுவினர் முன்னின்றார்கள்.
தற்போது அவசர நிவாரணப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாட்டின் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா இந்த பெரும் தொகையை வழங்குகிறது. இந்த 450 மில்லியன் டாலர் தொகுப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சலுகை அடிப்படையிலான கடன் உதவிக்கு 350 மில்லியன் டாலரும் நேரடி மானியமாக 100 மில்லியன் டாலரும் வழங்கப்படுகிறது.
இந்த நிதி எங்கு செலவிடப்பட வேண்டும் என்பது குறித்து இலங்கை அரசுடன் கலந்தாலோசித்து இறுதி செய்யப்படும் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியாவின் உறுதிப்பாடு
கொழும்பில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், "பிரதமர் மோடியின் கடிதத்தை நான் இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளேன். 2022-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்த இலங்கைக்கு, இந்த இயற்கை பேரிடர் பெரும் சவாலாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், “இந்தியாவின் 'அண்டை நாட்டுக்கு முன்னுரிமை' (Neighbourhood First) என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது," என்றார்.
கூடுதல் பொருளாதாரத் திட்டங்கள்
நிதியுதவி மட்டுமின்றி, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், இந்தியாவின் நேரடி முதலீடுகளை (FDI) அதிகரிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை மூலமாகவும் இந்தியா இலங்கைக்கு உதவ உள்ளது.
நேற்று மாலை கொழும்பு சென்றடைந்த அமைச்சர் ஜெய்சங்கருக்கு, இலங்கை சுற்றுலாத்துறை இணையமைச்சர் ருவான் ரணசிங்க உற்சாக வரவேற்பு அளித்தார்.


