- Home
- Tamil Nadu News
- வலுவிழந்தாலும் ஆட்டம் காட்டும் டிட்வா.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வலுவிழந்தாலும் ஆட்டம் காட்டும் டிட்வா.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை அருகே இரண்டு நாட்களாக ஒரே பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக 4 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை.

4 மாவட்டங்களில் கனமழை
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துவிட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பல மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை காலை தொடங்கிய கனமழை மாலை வரை நீடித்ததால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணி, மழைநீர் வடிகால் பணி, பறக்கும் ரயில்வே திட்டப் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், போரூர், மணப்பாக்கம், ராமாபுரம், பூந்தமல்லி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

