டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து டிசம்பர் 31, 2025-க்குள் வெளியேறினால், 3,000 டாலர் மற்றும் இலவச விமான டிக்கெட் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு 3,000 டாலர் (சுமார் ₹2,70,738) பணமும், இலவச விமான டிக்கெட்டும் வழங்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு குடியேறிகளுக்கு இந்த 'மெகா சலுகை' அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாடுகடத்தும் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'CBP Home' செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்
இது குறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் (டிசம்பர் 31, 2025) நாட்டை விட்டு வெளியேற சம்மதிப்பவர்களுக்கு இந்த 3,000 டாலர் உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்காக குடியேறிகள் 'CBP Home' என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் தங்கள் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இப்படி தாங்களாகவே முன்வந்து வெளியேறுபவர்களுக்கு, சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக விதிக்கப்படும் அபராதங்கள் மற்றும் தண்டனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
"இது ஒரு அன்பளிப்பு"
இந்தத் திட்டம் குறித்துப் பேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர் கிறிஸ்டி நோம் (Kristi Noem), "இந்தச் சலுகையை ஒரு பரிசாகக் கருதி குடியேறிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மீறினால், நாங்கள் உங்களைக் கண்டுபிடித்துக் கைது செய்வோம். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது," என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக கடந்த மே மாதம் 1,000 டாலர் நிதியுதவி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தொகை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

