'இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில், கூட்டாட்சி முறையை செயல்படுத்தும் திட்டம் இல்லை,'' என, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கையில், புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, 'தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் விதமாக, கூட்டாட்சி முறையை கொண்டு வர வேண்டும்.

இதற்கு ஏற்ற வகையில், புதிய அரசியல் சட்டத்தில், பிரிவுகள் இடம் பெற வேண்டும்' என, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கோரியிருந்தார். இதுகுறித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது, 'பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதை தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நாடாளுமன்றத்தில் பேசுகையில், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏற்க முடியாது. இதுபோன்ற செயல், நாடு இன ரீதியாக பிளவு படவே வழிவகுக்கும். இது போன்ற எந்த பிரிவும், அரசியல் சட்டத்தில் இடம் பெறாது.

ஒட்டுமொத்த இலங்கைக்கும் தேவையானவை மட்டுமே, அரசியல் சட்டத்தில் இடம் பெறும். யார் வேண்டுமானாலும் கோரிக்கை விடுக்கலாம்; ஆனால், அவற்றை அரசு ஏற்காது என்றார்.