இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பயண ஆவணங்கள் இல்லாவிட்டாலும் சட்ட நடவடிக்கை இல்லை என மத்திய அரசு அறிவிப்பு. 2015 ஜனவரி 9க்கு முன் வந்தவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.
இலங்கைத் தமிழ் அகதிகளிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், அரசிடம் பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். இது 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
புதிய சட்டம் மற்றும் நிவாரணங்கள்:
கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்ட 'குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025'-இன் கீழ், உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
ஆனால், இந்த புதிய சட்டத்தின் தண்டனை விதிகளிலிருந்து, 2015 ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இது பற்றி செப்டம்பர் 2 அன்று வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அரசிதழ் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மற்ற சமூகங்களுக்கும் சலுகை:
இலங்கைத் தமிழர்களைத் தவிர, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து 2024 டிசம்பர் 31-க்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆவணங்கள் இல்லாந்த ஆறு சிறுபான்மை சமூகத்தினருக்கும் (இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள்) மத்திய உள்துறை அமைச்சகம் இதேபோன்ற விலக்கை அளித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்குள் அடைக்கலம் தேடி வந்து இவர்கள் நீண்டகால விசாக்கள் (LTV) பெற இது உதவும். நீண்டகால விசாக்கள் என்பது இந்திய குடியுரிமைக்கு பெறுவதற்கு முந்தைய நடவடிக்கை ஆகும்.
எனினும், இந்த சலுகை குடியுரிமை திருத்த சட்டம் 2019-இன் (CAA) கடைசி தேதி 2014 டிசம்பர் 31-இல் இருந்து 2024 டிசம்பர் 31 ஆக நீட்டிக்கப்படவில்லை என்பதை ஒரு மூத்த மத்திய அரசு அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்.
