Asianet News TamilAsianet News Tamil

கச்சத்தீவு விவகாரம் எப்போதோ முடிந்துபோன பிரச்சினை...: இலங்கை கருத்து

இரு நாடுகளிலும் தேர்தல்கள் நெருங்கி வருவதால், இந்த நேரத்தில் கச்சத்தீவு பிரச்சினை பற்றிக் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என்று இலங்கை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Sri Lanka says Katchatheevu issue 'settled', signed by 'wise persons' from Colombo and New Delhi sgb
Author
First Published Apr 1, 2024, 11:30 PM IST

1974ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக பிரதமர் மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் காங்கிரஸையும் திமுகவையும் கடுமையாகச் சாடியுள்ள நிலையில், இலங்கை தரப்பு இதனை ஏற்கெனவே முடிந்துபோன பிரச்சினை என்று கூறியுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கச்சத்தீவு பிரச்சினையை கிளப்புவது இந்தியாவின் விவகராம் என்றும் இலங்கைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் இலங்கை அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ஏசியாநெட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வரலாற்று தகவல்களின்படி, 1974ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு இலங்கை அரசின் ஒரு பகுதியாக என்றும் 1970களில் இரு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்றும் இலங்கை அதிகாரி சுட்டிக்காட்டி இருக்கிறார். இரு நாடுகளிலும் தேர்தல்கள் நெருங்கி வருவதால், இந்த நேரத்தில் இதைப்பற்றிக் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் கிளப்பியது எப்படி?

பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடினார். அப்போது பால்க் ஜலசந்தி முதல் ஆதாம் பாலம் வரையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை நிர்ணயம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரதமரின் பேச்சைத் தொடர்ந்து இன்று, தலைநகர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் அரசு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலம் இந்திய மீனவர்களின் உரிமைகளைப் பறித்துவிட்டது என்றும் அதற்குப் பொறுப்பு ஏற்க மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கச்சத்தீவை இந்திரா காந்தி அரசு இலங்கைக்கு வழங்கியது என்று கூறி ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற ஆவணங்களை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அதனை பயன்படுத்திக்கொள்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios