தினமும் அடிதடி, உயிரிழப்பு - ராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விற்பனை செய்யும் இலங்கை..!
இலங்கை நாட்டு மக்கள் அத்தியாவசிய வாழ்க்கையை நடத்தவே கடுமையான போராட்டத்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து இருக்கிறது. உணவு பொருட்கள் துவங்கி, எரிபொருள், மின்சாரம் என அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய வாழ்க்கையை நடத்தவே கடுமையான போராட்டத்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக மின்வெட்டு, அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் சமையல் எரிவாயு என அனைத்துமே மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கிறது. இந்த சூழல் காரணமாக இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக இலங்கையில் பல பகுதிகளில் சுமார் ஏழு மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு ஏற்படுகிறது.
நீண்ட வரிசை:
இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, மக்கள் மிக நீண்ட வரிசையில் எரிபொருள் வாங்க காத்துக் கொண்டு இருக்கின்றனர். இதன் காரணமாக எரிபொருள் நிரப்பும் மையங்களுக்கு இலங்கை அரசு ராணுவ பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. சமீபத்தில் பெட்ரோல் வாங்க வரிசையில் நின்ற போது இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எரிபொருள் கிடைக்காததை அடுத்து பொது மக்கள் கடுமையான கோபத்தில், கொலம்போ பகுதியின் முக்கிய சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் ரமேஷ் பத்திரானா தெரிவித்தார்.
இரண்டு ராணுவ வீரர்கள்:
ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் மையங்களிலும் குறைந்த பட்சம் இரண்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எரிபொருள் வினியோகத்தின் போது எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவர் என ராணுவ செய்தி தொடர்பாளர் நிலந்தா பிரேமரத்தினே தெரிவித்தார். பாதுகாப்புக்கு நிற்கும் ராணுவ வீரர்கள் வரிசையை ஒழுங்குப்படுத்தும் பணியை செய்ய மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் டூரிஸ்ட் வாகனத்தை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. "சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதை பார்த்தோம், மேலும் சிலர் எண்ணெய் பொருட்களை பதுக்கி வைப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாகவே ராணுவத்தை களத்தில் இறக்கினோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதவிர எரிபொருள் வாங்க நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு நின்ற மூன்று முதியோர் வரிசையிலேயே உயிரிழந்தனர். சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவை சந்தித்தது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது.