உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை திரும்பப் பெறும் சிங்கப்பூர்: காரணம் என்ன?

உக்ரேனிய பண்ணையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சிங்கப்பூர் அரசு திரும்பப் பெறுகிறது

Singapore recalls eggs imported from Ukrainian farm

சால்மோனெல்லா பாக்டீரியா கண்டறியப்பட்டதை அடுத்து, உக்ரைன் நாட்டை சேர்ந்த பண்ணையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை திரும்பப் பெறுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட முட்டைகளை CEUA001 என்ற முத்திரை மூலம் அடையாளம் காண முடியும் என்றும், இந்த பண்ணை குறியீடு உள்ள அனைத்து முட்டைகளும் பாதிக்கப்பட்டவை என சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்துள்ளது.

முட்டைகளில் சால்மோனெல்லா பாக்டீரியா கண்டறியப்பட்டதால், சிங்கப்பூருக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கு  உக்ரைன் நாட்டை சேர்ந்த LCC Yasensvit என்ற பண்ணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா பிரச்சினையை சரிசெய்தால் மட்டுமே அப்பண்ணையின் தடை நீக்கப்படும் என சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்துள்ளது.

சால்மோனெல்லா என்டெரிடிடிஸ் பாக்டீரியா உணவு மூலம் பரவும் நோயை ஏற்படுத்தலாம். உணவு பச்சையாக அல்லது நன்கு சமைக்காமல் சாப்பிட்டால் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் பாக்டீரியாக்கள் வெப்பத்தால் அழிக்கப்படும் என்பதால், முட்டைகளை நன்கு சமைத்தால் அவை பாதுகாப்பானவை என்று கூறும் சிங்கப்பூர் உணவு முகமை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட முட்டைகளை நிறுத்திவைக்கவும், திரும்பப்பெறவும் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா சமூக பாதிப்புகளில் 18 சதவீதம் EG.5 ஒமிக்ரான் தொற்று!

வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்டவைகள் சால்மோனெல்லா பாக்டீரியாவால் ஏற்படும் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். சால்மோனெல்லா பாக்டீரியாவால் ஏற்படும் நோய்த்தொற்று பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக ஒரு வாரத்திற்குள் குறையும் என்றாலும், முதியவர்கள், இளம் குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு கொண்டவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்ட முட்டைகளை வாங்கிய நுகர்வோர், அவற்றை உண்ணும் முன் நன்கு சமைக்குமாறும், முட்டைகளை சாப்பிட்டு உடல்நிலை சரியில்லாதவர்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் எனவும் சிங்கப்பூர் உணவு முகமை அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடியான FairPrice குழுமம், அதன் கடைகளில் இருந்து பாதிக்கப்பட்ட முட்டைகளை அகற்றியதாக தெரிவித்துள்ளது. முட்டைகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அவற்றை அந்தந்த கடைகளில் கொடுத்து பணத்தை திரும்பப்பெறலாம் எனவும்  அக்குழுமத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தனது 70 சதவீத முட்டைகளை 18 நாடுகள் மற்றும் பிற பிராந்தியங்களில் இருந்து இறக்குமதி செய்கிறது. அந்த வகையில், உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, உக்ரைனில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய 2019 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் வரவிருக்கும் நான்காவது முட்டைப் பண்ணை மூலம், உள்ளூர் முட்டை விநியோகத்தை மேலும் பலப்படுத்தும் என கடந்த டிசம்பர் மாதம் சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்திருந்தது. இது, முழுமையாக செயல்பட்டதும், சிங்கப்பூரின் உள்ளூர் முட்டை பண்ணைகள் நாட்டின் முட்டை தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்ளூர் முட்டைகள் இரண்டும் ஆய்வு மற்றும் சோதனைக்கு உட்பட்டவை என சிங்கப்பூர் உணவு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. “சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள், உணவு முகமையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் சுகாதாரத் தரங்களை பூர்த்தி செய்யும் அங்கீகாரம் பெற்ற இடங்களில் இருந்து வர வேண்டும்.” என சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios