சிங்கப்பூரில் கொரோனா சமூக பாதிப்புகளில் 18 சதவீதம் EG.5 ஒமிக்ரான் தொற்று!
சிங்கப்பூரில் சமீபத்திய கொரோனா சமூக பாதிப்புகளில் 18 சதவீதம் பேர் EG.5 ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளால் தற்போது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதனிடையே, ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கொரோனா தொற்று, புதிய வகை கொரோனா திரிபுகள் ஆங்காங்கே கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜூன் மாதம் நடுப்பகுதியிலிருந்து கொரோனாவின் துணை மாறுபாடான EG.5 ஒமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் கவலையளிக்கும் விதமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் தற்போது 45 நாடுகளில் EG.5 ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சமீபத்திய கொரோனா சமூக வழக்குகளில் சுமார் 18 சதவீதம் பேர் EG.5 ஒமிக்ரான் துணை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதன்முதலாக கடந்த மே மாதம் 5ஆம் தேதி EG.5 ஒமிக்ரான் துணை மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட முதல் உள்ளூர் வழக்கு கண்டறியப்பட்டதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தற்போது கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், பிற சுழற்சி விகாரங்களுடன் ஒப்பிடும்போது, தொற்று பாதிப்பு, நோயின் தீவிரம் அல்லது இறப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு EG.5 ஒமிக்ரான் துணை மாறுபாடு பங்களிக்கவில்லை எனவும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அல்லது தீவிர சிகிச்சையில் உள்ள கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நிலையாக உள்ளதாக தெரிவித்துள்ள சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம், உள்ளூர் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பெர்சீட்ஸ் எரிகல் பொழிவு! இந்த அரிய வானியல் நிகழ்வை மிஸ் பண்ணாம பாருங்க!
சிங்கப்பூர் சுகாதார அமைச்சக இணையதளத்தின் சமீபத்திய தரவுகளின்படி, வாராந்திர கொரோனா பதிவுகளின் எண்ணிக்கை சிங்கப்பூரில் குறைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரையிலான வாரத்தில் 28,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், ஜூலை 23 முதல் ஜூலை 29 வரையிலான ஒரு வாரத்தில் சுமார் 5,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் புதிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஜூலை 29 வரையிலான வாரத்தில் 102 ஆக குறைந்துள்ளது. இது ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 29 வரையிலான வாரத்தில் அதிகபட்சமாக 568 ஆக இருந்தது. ஜூன் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 20 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். எஞ்சிய 7 பேர் 12 முதல் 59 வயதுக்குட்பட்டோர்.
EG.5 ஒமிக்ரான் துணை மாறுபாடானது, EG.5.1 என்ற துணைக்குழுவை உள்ளடக்கியது, இது XBB.1.9.2 துணை மாறுபாட்டின் வழித்தோன்றலாகும். EG.5 ஒமிக்ரான், இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளிநாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, அதன் பின்னர் குறைந்தது 51 நாடுகளில் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.