சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், சிங்கப்பூர் காவல்துறை நடிகர் விஜய்யின் பட தீம் மியூசிக்கைப் பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் (Lawrence Wong) தமிழில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவுடன் அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழில் வாழ்த்து கூறிய சிங்கப்பூர் பிரதமர்
அதில் பிரதமர் லாரன்ஸ் வாங் தனது வாழ்த்துச் செய்தியில், “இருளின் மீது ஒளி மேலோங்குகிறது. பயத்தின் மீது நம்பிக்கை மேலோங்குகிறது. தீபாவளியைக் கொண்டாடும் வேளையில், நம் வீடுகளை நிரப்பும் ஒளியை மட்டுமின்றி, நம் இதயங்களில் அது கொண்டுள்ள பொருளையும் நாம் கொண்டாடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
"அனைவருக்கும் ஒளிமயமான மற்றும் அர்த்தமுள்ள ஒளித் திருவிழா வாழ்த்துகள்" என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் படத்தின் தீம் மியூசிக்கில் தீபாவளி வாழ்த்து!
இதேபோல், சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தீம் மியூசிக்கைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அந்த வீடியோப் பதிவில், “அனைத்து நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! ஒளியின் திருவிழாவைக் கொண்டாடுவோம்! அனைவருக்கும் மின்னும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்ற வாழ்த்துச் செய்தி இடம்பெற்றுள்ளது.
பிரதமரின் தமிழ் வாழ்த்து மற்றும் காவல்துறையின் தமிழ் சினிமா இசை கலந்த புதுமையான வாழ்த்து ஆகியவை சிங்கப்பூரில் தீபாவளியின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளன.
