லீ சீன் லூங்: சிங்கப்பூர் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்று அதன் காயம் உலக மக்களிடம் இருந்து நீங்குவதற்குள், அடுத்ததாக சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்று அதன் காயம் உலக மக்களிடம் இருந்து நீங்குவதற்குள், அடுத்ததாக சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அந்த நாட்டின் 'நியூஸ் ஆசியா' இணையத்தின் ஃபேஸ்புக்கில் வெளியாகி உள்ளது. அதற்கு பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்தக் கருத்தில் இருந்துதான் இந்த கொலை மிரட்டல் செய்தியும் கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று மதியம் போலீசாருக்கு இதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது. வன்முறையை ஏற்படுத்தும் வகையில் பதிவு இருந்துள்ளது. ஃபேஸ்புக் பதிவை வைத்து போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நான்கு செல்போன்கள், லேப் டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 54 வயதுடைய அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கப்பூர் சட்டத்தின்படி, நாட்டில் வன்முறை ஏற்படுத்துவதைப் போன்று, மின்சாதனங்கள் அல்லது வேறு தொடர்புகள் மூலம் செய்திகளை பரப்பினால் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அபராதம் விதிக்கப்படும்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் வருத்தம் தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். தனது பதிவில், ''எனது இனிய நண்பர் ஷின்சோ. கடந்த மே மாதம் நான் டோக்கியோ சென்று இருந்தபோது அவருக்கு விருந்து அளித்து இருந்தேன். அவருடைய ஆதமா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவு... பிரதமர் மோடி இரங்கல்!!
துப்பாக்கி கலாச்சாரம் இல்லாத, அரசியல் வன்முறை இல்லாத ஜப்பான் நாட்டில், முன்னாள் பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் இன்று ஒரு நாள் தேசிய அளவில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.