மேற்கு ஆப்பிரிக்கா  அருகில் உள்ள நாடு பர்கினா பாசோ. பர்கினாவின் தலைநகரம் ஔகடோவுகோவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டின் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் அதிகமாக வந்து செல்லும் உணவு விடுதி ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இது ஆகும். 

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அமெரிக்க தூதரகத்தில் இருந்து யாரும் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதேபோன்று உணவு விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.