பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம்முனீர், துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகனை இஸ்தான்புல்லில் சந்தித்தார். இந்தியாவுடனான ராணுவ மோதல்களின் போது பாகிஸ்தானை ஆதரித்த நட்பு நாடுகளில் துருக்கியும் ஒன்று. இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் விவாதிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்தில் அதிகார மையமாக கருதப்படும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஜெனரல் அசிம் முனீர், இஸ்தான்புல்லில் துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகனை சந்தித்தார். இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதல்களின் போது பாகிஸ்தானை ஆதரித்த அதன் நட்பு நாடுகளில் முக்கியமானது துருக்கி.
துருக்கியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
இந்த நிலையில் துருக்கிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் அசீம் முனீரும் சென்றுள்ளார். ஈரான், அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கான நான்கு நாடுகளின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, ஷெபாஸ் ஷெரீப் ஞாயிற்றுக்கிழமை துருக்கி சென்றார். ஷெரீப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிரதிநிதிகள் சந்திப்பை நடத்தினர். அதிபர் எர்டோகன் உடனான தனது சந்திப்பில், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் கூட்டு முயற்சிகள் மற்றும் மேம்பட்ட இருதரப்பு முதலீட்டை ஆதரித்ததாக கூறப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உற்பத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, விவசாயம் ஆகியவற்றில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது என்று அப்போது முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
எனது அன்பு துருக்கி சகோதரருக்கு நன்றி - ஷெரீப்
முன்பு ஒப்புக் கொண்டதுபோல 5 பில்லியன் அமெரிக்க டாலர் வருடாந்திர இருதரப்பு வர்த்தக இலக்கை அடைய தற்போதும் ஒப்புக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தனது எக்ஸ் தளத்தில், ''இன்று மாலை இஸ்தான்புல்லில் எனது அன்பு சகோதரர் ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனை சந்தித்த பெருமை எனக்கு கிடைத்தது. சமீபத்திய பாகிஸ்தான்-இந்தியா மோதலில் பாகிஸ்தானுக்கு மகத்தான வெற்றிக்கு வழிவகுத்த அவர் அளித்த உறுதியான ஆதரவுக்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். துருக்கி சகோதர சகோதரிகளுக்கு பாகிஸ்தான் மக்களின் நன்றியுணர்வைத் தெரிவித்துக் கொண்டோம்.
குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டில் நமது பன்முக இருதரப்பு ஈடுபாடுகளின் தற்போதைய முன்னேற்றத்தையும் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். மேலும் இந்த அசைக்க முடியாத சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பு பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதற்கான எங்கள் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தினோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
துருக்கியில் மண்டியிட்ட அசிம் முனீர்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஜெனரல் அசிம் முனீரும் ஞாயிற்றுக்கிழமை (மே 25) இஸ்தான்புல்லில் துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகனை சந்தித்தார். எர்டோகனுக்கு அசிம் முனீரை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிமுகம் செய்து வைத்தார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக ட்ரோன் விடுத்த துருக்கி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற முப்படை தாக்குதலை மேற்கொண்டு இருந்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் தகர்க்கப்பட்டன. இந்தியாவுடனான அதிகரித்த ராணுவ பதற்றங்களின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவளித்து இருந்தது. துருக்கி படையினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி ட்ரோன் தாக்குதலை நடத்தி இருத்தாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக துருக்கி அதிபரை பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் சந்தித்து இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்து இருப்பதை அடுத்து இந்தியர்கள் துருக்கிக்கான தங்களது பயணத்தை ரத்து செய்தனர். இதனால், துருக்கிக்கி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது இஸ்லாமாபாத்துக்கு ஆதரவளித்து இருந்த 'நட்பு' நாடுகளுக்கு ஷெரீப், முனீர் இருவரும் பயணம் மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவர் ஒரு அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தின் போது ஒரு ராணுவ ஜெனரலுடன் செல்வது மிகவும் அசாதாரணமானது. பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகமான ராவல்பிண்டி தான் முக்கிய ஆலோசனை மையமாக திகழ்ந்து வருகிறது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதலுக்குப் பின்னர் நட்பு நாடுகளை பாகிஸ்தான் சந்தித்து பேசி வருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஷெரீப்புடன் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார், சிறப்பு உதவியாளர் தாரிக் ஃபதேமி மற்றும் ராணுவத் தலைவர் முனீர் ஆகியோரும் சென்றுள்ளனர்.