பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Shehbaz Sharif elected as Pakistan PM for second time smp

பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 336 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி போட்டியிடதடை விதிக்கப்பட்டது. அதனால், அவரது கட்சியினர் சுயேச்சையாக போட்டியிட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவை முக்கிய கட்சிகளாக போட்டியிட்டன.

அந்த தேர்தலில் பிஎம்எல்-என் கட்சி தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றது என நவாஸ் ஷெரிப்  தன்னிச்சையாக அறிவித்தார். இதனால், பதற்றமான சூழல் எழுந்தது. தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகின. மோசடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இறுதியில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ்சபை என அழைக்கப்படும் தேசிய சட்டமன்றம் இன்று கூடியது. அதில், பெரும்பான்மை வாக்குகளை பெற்று பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் (72) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மொத்தம் 336 உறுப்பினர்கள் கொண்ட அவையில், பெரும்பான்மைக்கு 169 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 201 வாக்குகளை பெற்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆகியவற்றின் ஒருமித்த வேட்பாளரான ஷெபாஸ் ஷெரீப் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியைச் சேர்ந்த உமர் அயூப் கான், 92 வாக்குகளைப் பெற்றார்.

அபுதாபியில் மோடி திறந்து வைத்த கோயிலுக்காக வங்கி வேலையைக் கைவிட்ட விஷால் படேல்!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப், வருகிற 4ஆம் தேதி (நாளை) அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையான அய்வான்-இ-சதரில் பதவியேற்க உள்ளார். முன்னதாக, பொதுத் தேர்தலுக்கு முன்பு நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான கூட்டணி அரசாங்கத்தில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, தற்போது பாகிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தின் கீழ் உள்ளது.

ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவதற்கான விருப்பமான வேட்பாளராக இருந்த போதிலும், அவரது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளால் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரைக்கப்பட்டார். இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சி போட்டியிட்ட 264 இடங்களில் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இருப்பினும், மற்ற கட்சிகளின் ஆதரவுடன், அக்கட்சி ஆட்சியமைத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios