போலியாக ஆவணங்களை தயார் செய்து, அகதிகள் போர்வையில் பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட, ‘பச்சை நிற கண்’ கொண்ட ஆப்கானிஸ்தான் பெண்ணுக்கு ஜாமீன் வழங்க பெஷாவர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
போலி ஆவணம்
போலியான ஆவணங்கள தயாரித்து, ஆப்கானைச் சேர்ந்த ஷர்பத் குலா (46) என்ற பெண், தனது குடும்பத்தாரை பாகிஸ்தானில் தங்கவைத்ததாக போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஷர்பத் குலாவை கடந்த மாதம் 26-ந்தேதி கைது செய்தனர்.
கைது
இது தொடர்பாக பாகிஸ்தான் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஷர்பத் குலா மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் மனு
இந்நிலையில், பெஷாவரில் உள்ள ஜூடிசியல் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஷர்பத் குலாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஷர்பத் குலா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர், ஷர்பத் குலா தான் அவரின் குடும்பத்துக்கு வருமானம் ஈட்டித்தரும் ஒரே நபர். தற்போது அவரும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதலால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனக் கோரினார்.
மறுப்பு
இதையடுத்து இந்த மனுதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில், நேற்று இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, பாகிஸ்தான் குடியுரிமை வைத்து இருந்ததற்கான எந்த ஆதாரமும் ஷர்பத் குலாவிடம் இல்லை. என்பதால், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என தீர்ப்பளித்தார்.
உதவி
இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் கடந்தவாரம் இது தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ மனிதநேய அடிப்படையில், ஆப்கான் பெண் ஷர்பத் குலா விடுதலை செய்யப்படுவார். அவருக்கு பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பு சார்பில் ஜாமீனுக்கு ஏற்பாடு செய்யப்படும்'' எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பச்சைக் கண்ணழகி யார்?
1989-ம் ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தபோது பெரும்பாலான மக்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகரைச் சேர்ந் நிசார் பாக் அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர்.
அவ்வாறு முகாம்களில் தங்கியிருந்தவர்களில் கவலையும், விரக்தியும் கலந்த முகத்துடன் பச்சைநிறக் கண்களோடு காணப்பட்ட ஷர்பத் குலா(12) என்ற சிறுமியை அமெரிக்காவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் ஸ்டீவ் மெக்கரி புகைப்படம் எடுத்தார்.
அதன்பின் அந்தப் புகைப்படம் நேஷனல் ஜியாகிராபிக் இதழின் அட்டைப் படத்தில் வெளிவந்து, `பச்சை நிற கண் அழகியான ஆப்கன் பெண்' என்று உலக புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
